கொரோனா அச்சுறுத்தலால் வரும் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஐபிஎல்லுக்காக தீவிரமாக தயாராகிவந்தது சிஎஸ்கே அணி. 

கேப்டன் தோனி, ரெய்னா, முரளி விஜய், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள், சென்னையில் முகாமிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுவந்தனர். 

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்திய அணியில் இடம்பெறாமல் கிரிக்கெட் ஆடாமல் இருந்த தோனி, பிசிசிஐயின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டார். எனவே தோனியின் கெரியர் முடிந்துவிட்டதாக பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி, டி20 உலக கோப்பைக்கான அணியில் தனது பெயரை இடம்பெற வைக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்த தோனி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுவந்தார். 

டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற, தோனிக்கு ஐபிஎல் தான் கடைசி சான்ஸ். எனவே அதை பயன்படுத்தி கொள்ளும் முனைப்பில் இருந்தார். அதனால் அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டுவந்த நிலையில், ஐபிஎல் தள்ளிப்போனதால், சிஎஸ்கே வீரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். தோனி தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றுவிட்டார். 

ஆனால் அங்கு சென்றும் கூட, வீட்டில் இருந்து ஓய்வு எடுக்கவில்லை. ஃபிட்னெஸை பராமரிக்கும் வகையிலும், தொடர்ந்து ஆட்டத்தில் டச்சில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், பேட்மிண்ட்டன் ஆட தொடங்கிவிட்டார். ராஞ்சிக்கு சென்ற தோனி, ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தில் உள்ள பேட்மிண்ட்டன் களத்தில் குதித்து, பேட்மிண்ட்டன் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.