Yashasvi Jaiswal: ரோகித் சர்மா, கேஎல் ராகுல் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி பவர்பிளேயில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டி தற்போது திருவனந்தபுரம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங் செய்வதாக அறிவித்தார். முதல் டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜம்பாவை களத்தில் இறக்கியது.
ஆனால், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். இதில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசித் தள்ளினார். கிளென் மேக்ஸ்வெல் வீசிய 3ஆவது ஓவரில் மட்டும் 2 பவுண்டரி விளாசினார்.
இதையடுத்து 4ஆவது ஓவரை சீன் அபாட் வீச வந்தார். அவரது ஓவரில் மட்டுமே 4, 4, 4, 6, 6 என்று வரிசையாக பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி அந்த ஓவரில் 24 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக இந்திய அணி 4 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 6ஆவது ஓவரை நாதன் எல்லிஸ் வீச வந்தார். அவரது ஓவரிலும் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த ஜெய்ஸ்வால் 24 பந்துகளில் 53 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதாவது, டி20 போட்டியில் பவர்பிளே ஓவர்களில் அரைசதம் அடித்து அதிக ரன்கள் குவித்த ரோகித் சர்மா 50*(23) மற்றும் கேஎல் ராகுல் 50(19) சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தினார். எனினும், அவர் 25 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.