WPL 2023: அறிமுக சீசனில் முதல் கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை..! டெல்லி கேபிடள்ஸ் ஏமாற்றம்
மகளிர் பிரீமியர் லீக் ஃபைனலில் டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி அறிமுக சீசனில் முதல் கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்றுடன் முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதிய இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், அலைஸ் கேப்ஸி, ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், ஷிகா பாண்டே, மின்னு மனி.
மும்பை இந்தியன்ஸ் அணி:
யஸ்டிகா பாடியா, ஹைலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன், மெலி கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான மெக் லானிங் ஒருமுனையில் நிலைத்து நின்று பேட்டிங் ஆட, மறுமுனையில் ஷஃபாலி வெர்மா(11), அலைஸ் கேப்ஸி(0), ஜெமிமா ரோட்ரிக்ஸ்(9) ஆகியோர் இசி வாங்கின் பவுலிங்கில் மளமளவென ஆட்டமிழந்தனர். மேரிஸன் கேப் 21 பந்தில் 18 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நின்று ஆடிய மெக் லானிங் 35 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார்.
ஜெஸ் ஜோனாசென்(2), மின்னு மனி(1), டானியா பாட்டியா(0) ஆகிய மூவரும் ஹைலி மேத்யூஸின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். 79 ரன்களுக்கே டெல்லி கேபிடள்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் ஷிகா பாண்டேவும் கடைசி வீராங்கனையாக இறங்கிய ராதா யாதவும் இணைந்து கடைசி 4 ஓவர்களையும் ஆடி அணியின் ஸ்கோரை 131 ரன்களாக உயர்த்தினர். ராதா யாதவ் கடைசி 2 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். ராதா யாதவ் - ஷிகா பாண்டே இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 4 ஓவரில் 52 ரன்களை குவித்தனர். ஷிகா பாண்டே 17 பந்தில் 27 ரன்களையும், ராதா யாதவ் 12 பந்தில் 27 ரன்களையும் விளாசினர். 20 ஓவரில் 131 ரன்கள் அடித்தது.
ஒரே இன்னிங்ஸில் அந்த பையன் என் கெரியரை முடிச்சு வச்சுட்டான் - ஷிகர் தவான்
132 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஹைலி மேத்யூஸ்(13) மற்றும் யஸ்டிகா பாட்டியா(4) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் நாட் ஸ்கிவர் பிரண்ட் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆகிய இருவரும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி 3வது விக்கெடுக்கு 72 ரன்களை சேர்த்தனர். ஹர்மன்ப்ரீத் கௌர் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஃபைனலில் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து 60 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார் நாட் ஸ்கிவர் பிரண்ட்.
கடைசி ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, மகளிர் பிரீமியர் லீக் அறிமுக சீசனில் முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.