ஒரே இன்னிங்ஸில் அந்த பையன் என் கெரியரை முடிச்சு வச்சுட்டான் - ஷிகர் தவான்
இஷான் கிஷன் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததுமே, இந்திய அணியில் இனி தனக்கு இடமில்லை என்பதை தெரிந்துகொண்டதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. 2011ம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்திய மண்ணில் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக தயாராகிவருகிறது இந்திய அணி. இந்திய அணியின் ஆடும் லெவன் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.
ஓபனிங்கை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் இறங்குவது உறுதியாகிவிட்டது. ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித்துடன் சேர்ந்து பல அருமையான தொடக்கங்களை அமைத்து கொடுத்து இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர் ஷிகர் தவான்.
உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மிகப்பெரிய ஐசிசி தொடர்களில் மிகச்சிறப்பாக ஆடக்கூடிய வெகுசில வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர். ரோஹித்துடன் இணைந்து ஓபனிங்கில் பல சாதனைகளை படைத்துள்ளார். 167 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6793 ரன்களை குவித்துள்ளார் ஷிகர் தவான்.
2022ம் ஆண்டு 22 ஒருநாள் போட்டிகளில் ஆடி 70 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 688 ரன்களை அடித்துள்ளார். ஷிகர் தவான் நன்றாக ஆடினாலும், ஒருநாள் கிரிக்கெட்டின் அணுகுமுறை மாறிவிட்ட நிலையில், அதிரடியான ஓபனிங்கிற்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது. அந்தவகையில் வங்கதேசத்துக்கு எதிராக இஷான் கிஷன் இரட்டை சதமடிக்க, அவரைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக ஷுப்மன் கில் இரட்டை சதமடித்தார்.
இரட்டை சதமடித்த இளம் வீரர்களை புறக்கணிக்க முடியாமல் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனால் ஷிகர் தவான் நன்றாக ஆடிவந்தாலும் கூட அணியில் அவரது இடத்தை இழந்தார். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு சரியான நேரத்தில் வாய்ப்பளிப்பது அவசியம். இந்த எதார்த்தத்தை அவரும் புரிந்துகொண்டுள்ளார்.
ஒருநாள் உலக கோப்பையில் ஷிகர் தவான் தான் தொடக்க வீரராக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் இரண்டே மாதங்களில் அவரது இடம் பறிபோனது.
செம கடுப்பில் இருந்த ஜடேஜாவை சமாதானப்படுத்திய தோனி..! கண்டிஷன் போட்டு சிஎஸ்கே ஆட ஒப்புக்கொண்ட ஜடேஜா
இந்நிலையில், தனது இடம் பறிபோனது குறித்து பேசிய ஷிகர் தவான், ரோஹித் சர்மா கேப்டன்சியை ஏற்றதும், அவரும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் எனக்கு போதுமான ஆதரவு அளித்தனர். நான் தான் உலக கோப்பையில் ஆடப்போகிறேன் என்று கூறினார்கள். அதற்கேற்ப 2022ம் ஆண்டு எனக்கு சிறப்பானதாக அமைந்தது. ஆனால் அதேவேளையில், மற்ற 2 ஃபார்மட்டிலும் சிறப்பாக ஆடிவரும் ஷுப்மன் கில்லுக்கு ஒருநாள் கிரிக்கெட்டிலும் வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. அதை அவரும் சிறப்பாக பயன்படுத்தி நன்றாக ஆடி அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றார். இஷான் கிஷன் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்ததுமே, எனக்கு இனிமேல் அணியில் இடமில்லை என்பதை தெரிந்துகொண்டேன் என்றார் ஷிகர் தவான்.
IPL 2023: ஆர்சிபி தான் இந்த சீசனின் பெஸ்ட் பவுலிங் அட்டாக்..! சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து