ராஞ்சி டிராபி போட்டிகளை தவறாமல் பார்த்து திறமையான வீரர்களை ஐபிஎல் அணிக்கு தேர்வு செய்வதாக நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

IPL Nita Ambani: ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியாவை எப்படி கண்டுபிடித்தார் என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி கூறியுள்ளார். புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்பதில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய திறமைகளை கண்டறிந்து ஐபிஎல் அணியில் சேர்க்க ராஞ்சி டிராபி போட்டிகளை தவறாமல் பார்த்து வருவதாக நீதா அம்பானி பாஸ்டனில் தெரிவித்தார். அப்படி ஒரு முறை தனது அணியில் இருந்தவர்கள் இரண்டு ஒல்லியான இளைஞர்களை தன்னிடம் அழைத்து வந்ததாகவும், பணமில்லாததால் மூன்று வருடங்களாக மேகி மட்டுமே சாப்பிட்டு வந்ததாக அவர்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அவர்களிடம் பேசியபோது அவர்களின் கண்களில் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையையும் கண்டதாகவும் அவர் கூறினார்.

சாம்பியன்ஸ் டிராபி: ரிஷப் பண்ட் காயம்! அதிரடி வீரருக்கு அதிர்ஷ்டம்! இந்தியாவின் பிளேயிங் லெவன்!

அப்படித்தான் அவர்களை மும்பை அணியில் சேர்க்க முடிவு செய்ததாகவும், ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை வாங்க ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே செலவிட முடியும் என்பதால், அதிக பணம் செலவழிக்காமல் திறமையான வீரர்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதுதான் தங்கள் அணியின் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஹர்திக் பாண்டியாவை 10 லட்சம் ரூபாய்க்கு அணியில் சேர்த்ததாகவும், இன்று அவர் மும்பை அணியின் கேப்டனாக இருப்பதாகவும் நீதா அம்பானி தெரிவித்தார்.

அடுத்த வருடம் தங்கள் தேர்வுக்குழு மற்றொரு பந்து வீச்சாளரை தன்னிடம் அழைத்து வந்ததாகவும், அவரைப் பார்த்த உடனேயே அவரது பந்துகள்தான் அவரைப் பற்றி பேசும் என்று தோன்றியதாகவும், அவர்தான் ஜஸ்பிரித் பும்ரா என்றும், அதன் பிறகு நடந்தது எல்லாம் வரலாறு என்றும் அவர் கூறினார். கடந்த வருடம் தங்கள் அணி கண்டுபிடித்த வீரர் திலக் வர்மா என்றும், இன்று அவர் மும்பை மற்றும் இந்திய அணியின் பெருமை என்றும் அவர் தெரிவித்தார். இதனால்தான் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்திய கிரிக்கெட்டின் நர்சரி என்று அழைப்பதாகவும் நீதா அம்பானி பெருமையாக குறிப்பிட்டார். இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் மார்ச் 23 அன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணியின் முதல் போட்டி நடைபெறும்.