இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

பொல்லார்டின் இந்த முடிவை கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. டாஸுக்கு பின்னர் பேசிய விராட் கோலி, நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் விரும்பினோம். நான் டாஸ் ஜெயித்தால் பேட்டிங்தான் தேர்வு செய்திருப்பேன். பிட்ச் மிகவும் வறண்டு உள்ளது. போகப்போக பிட்ச் மந்தமாகும். எனவே டீசண்ட்டான ஸ்கோரை அடித்து நல்ல இலக்கை நிர்ணயிப்பது, அணியை வலுவான நிலையில் இருக்க உதவும். இப்படிப்பட்ட பிட்ச்சில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று எங்களை பேட் செய்ய பணித்தது வியப்பாகத்தான் இருக்கிறது. நாங்களும் முதலில் பேட் செய்யவே விரும்பியதால், இது நல்லதாய் போயிற்று என்று கோலி தெரிவித்தார். 

ஆனால், இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 287 ரன்களை குவித்து, வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்த 288 ரன்களை அந்த அணி எளிதாக அடித்து வெற்றி பெற்றது. முதல் விக்கெட்டை விரைவில் இழந்தபோதிலும், ஹெட்மயரும் ஹோப்பும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடி இருவருமே சதமடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அதிரடியாக ஆடி 106 பந்தில் 139 ரன்களையும், ஹோப் 102 ரன்களையும் குவித்தனர். இவர்களின் பொறுப்பான பேட்டிங்கால் வெஸ்ட் இண்டீஸ் அணி 48வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்திய அணி அடித்த 287 ரன்கள் என்பது, சேப்பாக்கம் ஆடுகளத்தில் தடுத்துவிடக்கூடிய இலக்குதான். ஆனால் பவர் ஹிட்டர்களான வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஆர்டருக்கு இது அடிக்கக்கூடிய இலக்குதான் என்பதை நிரூபித்துவிட்டார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவதாக பேட்டிங் ஆடி இலக்கை விரட்ட விரும்பியபோது, அது தனக்கு வியப்பளிப்பதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். அப்போதே நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதாவது, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டின் முடிவு, அவர்கள் அணியின் பலத்தை அறிந்து எடுக்கப்பட்ட முடிவு. ஏனெனில் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் 260-270 ரன்கள் அடித்தாலே, எதிரணியை தடுக்க போதுமானது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த ஸ்கோரை அடித்தால், சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணியை தடுக்குமளவிற்கு, அவர்களிடம் மிகச்சிறந்த பவுலர்கள் இல்லை. அதேநேரத்தில் 260-270 என்ற இலக்கை வெறித்தனமாக அடித்து விரட்டுவதற்கு தகுதியான பேட்டிங் ஆர்டரை அந்த அணி கொண்டுள்ளது. எனவே அதை கருத்தில் கொண்டு அந்த அணி இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்திருந்தோம். இதையும் படிங்க: முதல் ஒருநாள் போட்டி: பொல்லார்டு இப்படி ஒரு முடிவெடுத்தது எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு.. அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த கோலி

அதேதான் நடந்தது. இதே 290 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் ஆடி அடித்திருந்தால், கண்டிப்பாக இந்திய அணி சேஸ் செய்திருக்கும். ஏனெனில் இந்த ஸ்கோரை தடுக்குமளவிற்கான சிறப்பான பவுலிங் அட்டாக் வெஸ்ட் இண்டீஸிடம் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி இலக்கை விரட்டுவதில் வல்லமை பெற்ற அணி. எனவே எதிரணியின் பலம் மற்றும் தங்களது பலம் ஆகிய இரண்டையும் நன்கு அறிந்து, பொல்லார்டு எடுத்த முடிவு, சரியானதுதான் என்பதை அந்த அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று நிரூபித்துவிட்டனர்.