இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் ஒருநாள் போட்டி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

பொல்லார்டின் இந்த முடிவை கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. டாஸுக்கு பின்னர் பேசிய விராட் கோலி, நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் விரும்பினோம். நான் டாஸ் ஜெயித்தால் பேட்டிங்தான் தேர்வு செய்திருப்பேன். பிட்ச் மிகவும் வறண்டு உள்ளது. போகப்போக பிட்ச் மந்தமாகும். எனவே டீசண்ட்டான ஸ்கோரை அடித்து நல்ல இலக்கை நிர்ணயிப்பது, அணியை வலுவான நிலையில் இருக்க உதவும். இப்படிப்பட்ட பிட்ச்சில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று எங்களை பேட் செய்ய பணித்தது வியப்பாகத்தான் இருக்கிறது. நாங்களும் முதலில் பேட் செய்யவே விரும்பியதால், இது நல்லதாய் போயிற்று என்று கோலி தெரிவித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டின் முடிவு, அவர்கள் அணியின் பலத்தை அறிந்து எடுக்கப்பட்ட முடிவு. ஏனெனில் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் 260-270 ரன்கள் அடித்தாலே, எதிரணியை தடுக்க போதுமானது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த ஸ்கோரை அடித்தால், சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணியை தடுக்குமளவிற்கு, அவர்களிடம் மிகச்சிறந்த பவுலர்கள் இல்லை. அதேநேரத்தில் 260-270 என்ற இலக்கை வெறித்தனமாக அடித்து விரட்டுவதற்கு தகுதியான பேட்டிங் ஆர்டரை அந்த அணி கொண்டுள்ளது. எனவே அதை கருத்தில் கொண்டு அந்த அணி இந்த முடிவை எடுத்துள்ளது.