டி20 உலக கோப்பையில் அசத்தும் சிறிய அணிகள்.! தகுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஸ்காட்லாந்து வெற்றி
டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் ஸ்காட்லாந்திட ம் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
டி20 உலக கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு 8 அணிகள் நேரடியாக தகுதிபெற்ற நிலையில், எஞ்சிய 4 அணிகளை தீர்மானிக்கும் தகுதிப்போட்டிகள் நடந்துவருகின்றன.
தகுதிச்சுற்றில் க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, நேற்று நமீபியாவிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற ஆசிய சாம்பியன் இலங்கை அணி, நமீபியாவிடம் பயிற்சி போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: கடைசி ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய ஷமி.. பயிற்சி போட்டியில் ஆஸி.,யை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்நிலையில், இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்திடம் 42 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து இடையேயான தகுதிப்போட்டி ஹோபர்ட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கைல் மேயர்ஸ், எவின் லூயிஸ், பிரண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர், ஒடீன் ஸ்மித், அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், ஒபெட் மெக்காய்.
முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர் முன்சி அபாரமாக ஆடி கடைசிவரை களத்தில் நின்று 53 பந்தில் 66 ரன்கள் அடித்தார். மைக்கேல் ஜோன்ஸ்(20), கேப்டன் பெரிங்டன்(16), மாக்லியோட்(23), கிறிஸ் க்ரீவ்ஸ்(16) ஆகியோரின் சிறு சிறு பங்களிப்பால் 20 ஓவரில் 160 ரன்கள் அடித்தது ஸ்காட்லாந்து அணி.
161 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ்(20), எவின் லூயிஸ்(14), பிரண்டன் கிங்(17), நிகோலஸ் பூரன்(4), ஷமர் ப்ரூக்ஸ்(4), ரோவ்மன் பவல்(5) என அனைத்துவீரர்களுமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஜேசன் ஹோல்டர் மட்டும் ஓரளவிற்கு நன்றாக ஆடி 38 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனைத்து வீரர்களுமே பேட்டிங்கில் சொதப்ப, 19வது ஓவரில் வெறும் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இதையும் படிங்க - ஐபிஎல் அணிகளுக்கு அதிரடி உத்தரவு.. தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட கெடு விதிப்பு
42 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தகுதிச்சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சிறிய அணிகளிடம் படுதோல்வி அடைந்து அதிர்ச்சியளித்திருக்கின்றன. நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளன.