அந்த 2 பசங்க மட்டும் தான் என்னைப்போல் அதிரடியா ஆடுறானுங்க..! வேற யாருமே இல்ல.. சேவாக் அதிரடி
தற்போதைய இந்திய அணியில் தன்னைப்போல் அதிரடியாக ஆடவல்ல வீரர்கள் இருவர் மட்டுமே என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக். சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சேவாக்கும் ஒருவர். 1999ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடிய சேவாக், 104 டெஸ்ட், 251 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 8586 மற்றும் 8273 ரன்களை குவித்துள்ளார் சேவாக்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சேவாக், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் அடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் எப்படி அதிரடியாக தொடங்குவாரோ, அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் வீரேந்திர சேவாக். அவருக்கு டெஸ்ட் - ஒருநாள் என்று ஃபார்மட் பேதமெல்லாம் கிடையாது. அதேபோல ஃபாஸ்ட் பவுலர் - ஸ்பின்னர் என்ற பேதமும் கிடையாது. பந்தை பார்த்து அடிப்பது என்பதுதான் சேவாக்கின் பேட்டிங் வியூகம். கண்டிஷன், ஃபார்மட், பவுலர் என எதைப்பற்றியும் கவலைப்படாமல், எதையும் பொருட்படுத்தாமல் முதல் பந்திலிருந்தே பந்தை பார்த்து அடித்து ஆடும் வல்லமை பெற்றவர் வீரேந்திர சேவாக். அதுதான் அவரது தனித்தன்மையும் கூட.
வீரேந்திர சேவாக்கை மற்ற வீரர்களிடமிருந்து பிரித்து தனித்துவமாக காட்டியதே அவரது அதிரடியான பேட்டிங் தான். சில நேரங்களில் அதுவே அவருக்கு எதிராகவும் திரும்பியிருக்கிறது. முதல் பந்து அல்லது முதல் ஓவரிலேயே சில முறை அவுட்டும் ஆகியிருக்கிறார். ஆனால் அடித்து ஆடி செட்டில் ஆகிவிட்டால், இரட்டை சதம், முச்சதம் என்று அடிக்காமல் பெவிலியனுக்கு திரும்பமாட்டார்.
இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மையான பிரச்னையை ஒப்புக்கொள்ள மறுக்கும் ரோஹித் சர்மா..!
இந்நிலையில், இப்போதைய வீரர்களில் யார் தன்னை போல் அடித்து ஆடும் வல்லமை பெற்றவர் என்பது குறித்து சேவாக் பேசியிருக்கிறார். இதுகுறித்து கருத்து கூறிய வீரேந்திர சேவாக், இந்திய அணியில் என்னை போல் அடித்து ஆடக்கூடிய வீரர் இப்போது யாரும் இல்லை. அப்படி யோசித்து பார்த்தால் 2 வீரர்கள் என் நினைவிற்கு வருகிறார்கள். பிரித்வி ஷா மற்றும் ரிஷப் பண்ட்; இவர்கள் இருவரும் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடுகிறார்கள். ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னை போல் அடித்து ஆடுகிறார். ஆனால் அவர் 90-100 ரன்களில் திருப்தியடைந்துவிடுகிறார். நான் அப்படியல்ல; 200-250-300 ரன்களை நோக்கித்தான் நான் ஆடுவேன். அந்தளவிற்கு அவரும் ஆடும்பட்சத்தில் கண்டிப்பாக ரசிகர்களை இன்னும் அதிகமாக எண்டர்டெய்ன் செய்வார் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.