யார் பேச்சையும் கேட்காத.. 160 கிமீ வேகத்தில் வீசி மிரட்டு..! உம்ரான் மாலிக்கை உசுப்பேற்றும் இஷாந்த் சர்மா
உம்ரான் மாலிக்கால் முடியுமென்றால் 150-160 கிமீ வேகத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வீசவேண்டும். ரன்கள் போனாலும் போகட்டும்; ஆனால் வேகத்தை குறைக்கக்கூடாது என்று இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் எல்லா காலக்கட்டத்திலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் இருந்ததில்லை. அந்த குறையை தீர்த்துவைத்தவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக் தான்.
ஐபிஎல்லில் 150-160 கிமீ வேகத்திற்கு மேல் வீசி அனைவரையும் கவர்ந்தார். அதன்விளைவாக இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பிடித்தார். கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான உம்ரான் மாலிக், இதுவரை 8 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் ஆடி முறையே 13 மற்றும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மையான பிரச்னையை ஒப்புக்கொள்ள மறுக்கும் ரோஹித் சர்மா..!
உம்ரான் மாலிக் அசால்ட்டாக 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியவர் என்பதால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் அவரை ஆடவைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறியிருந்தனர். ஆனால் அவருக்கு அந்த உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் உம்ரான் மாலிக்கை கண்டிப்பாக ஆடவைக்கவேண்டும் என்றும் டெஸ்ட் அணியிலும் அவரை சேர்க்க வேண்டும் என்றும் பிரெட் லீ வலியுறுத்தியிருந்தார்.
ஐபிஎல்லில் 17 போட்டிகளில் ஆடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் உம்ரான் மாலிக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடும் உம்ரான் மாலிக், ஐபிஎல்லுக்காக தீவிரமாக தயாராகிவருகிறார். உம்ரான் மாலிக் அசால்ட்டாக 150 கிமீ வேகத்தில் வீசும் நிலையில், அவரது லைன் & லெந்த்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் சிலர் கருத்து கூறிவரும் நிலையில், ரன் போவதை பற்றியோ அல்லது வேறு எதைப்பற்றியோ யோசிக்காமல் தொடர்ச்சியாக அதே 150 - 160 கிமீ வேகத்தில் பந்துவீச வேண்டும் என்று இஷாந்த் சர்மா கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய இஷாந்த் சர்மா, உம்ரான் மாலிக்கால் 150-160 கிமீ வேகத்தில் பந்துவீச முடிகிறது என்றால் அந்த வேகத்தில் வீசலாம். ரன்கள் போவதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவரது வேகத்தின் மீதும் திறமை மீதும் நம்பிக்கை வைத்து வேகமாக வீச வேண்டும். அதிவேகத்தில் வீசுவதில் உள்ள நன்மை என்னவென்றால், வேகத்தின் மீதான பயத்தால் பேட்ஸ்மேன்கள் கண்ணை சிமிட்டக்கூட மாட்டார்கள். எனவே உம்ரான் மாலிக்கை அவரால் முடிந்த அளவு வேகத்தில் வீச யாராவது அறிவுறுத்த வேண்டும் என்றார் இஷாந்த் சர்மா.