இலங்கைக்கு எதிராக சதமடித்து சச்சின் டெண்டுல்கரின் மேலும் சில சாதனைகளை காலி செய்த கோலி.! சாதனை நாயகன் கிங் கோலி
இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 46வது சதத்தை விளாசிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் மேலும் சில சாதனைகளை தகர்த்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 2-0 என வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். ஷுப்மன் கில் 116 ரன்களையும், விராட் கோலி 166 ரன்களையும் குவிக்க, இந்திய அணி 50 ஓவரில் 390 ரன்களை குவித்து, 391 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்தது.
இந்த போட்டியில் விராட் கோலி அடித்த சதம், ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 46வது சதம் ஆகும். இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 21வது சதம் இதுவாகும். இதன் மூலம், சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
இதற்கு முன், இந்திய மண்ணில் 20 சதங்கள் அடித்திருந்த சச்சின் டெண்டுல்கர் தான் முதலிடத்தில் இருந்தார். சொந்த மண்ணில் 21 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்தார் விராட் கோலி. இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவில் 14 சதங்கள் அடித்த ஹாஷிம் ஆம்லா 3ம் இடத்தில் உள்ளார்.
மேலும், இலங்கைக்கு எதிராக 10 சதங்கள் அடித்த கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 9 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலியும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 9 சதங்கள் அடித்துள்ளார். இலங்கைக்கு எதிராகவும் 9 சதங்கள் விளாசியிருந்த கோலி, இன்று 10வது சதத்தை அடித்து சாதனை படைத்தார்.