IND vs SL: விராட் கோலி மெகா சதம்; ஷுப்மன் கில் 2வது சதம்..! 50 ஓவரில் 390 ரன்களை குவித்தது இந்திய அணி
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் 50 ஓவரில்390 ரன்களை குவித்த இந்திய அணி, 391 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதால் இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டனர். அதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டனர்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
இலங்கை அணி:
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, நுவானிது ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), ஆஷன் பண்டாரா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, ஜெஃப்ரி வாண்டர்சே, சாமிகா கருணரத்னே, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷுப்மன் கில்லும் விராட் கோலியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 131 ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடி சதமடித்த ஷுப்மன் கில் 97 பந்தில் 14 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் கில்லின் 2வது சதமாகும்.
கில்லை தொடர்ந்து அபாரமாக ஆடிய விராட் கோலியும் சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 46வது சதம் இதுவாகும். சதத்திற்கு பின் காட்டடி அடித்தார் கோலி. 43வது ஓவரில் சதமடித்த கோலி, அதன்பின்னர் 66 ரன்களை குவித்தார். சதமடித்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார் கோலி. 110 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 166 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று சிறப்பாக இன்னிங்ஸை முடித்து கொடுத்தார்.
கோலியின் மெகா சதம் மற்றும் கில்லின் அபாரமான சதத்தால் 50 ஓவரில் 390 ரன்களை குவித்த இந்திய அணி, 391 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.