இவரை விட்டால் இந்தியாவில் வேற திறமையான வீரரே இல்லையா..? கேஎல் ராகுல் தேர்வை கடுமையாக விளாசிய வெங்கடேஷ் பிரசாத்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பேட்டிங்கில் சொதப்பிய கேஎல் ராகுலை கடுமையாக விமர்சித்திருந்த வெங்கடேஷ் பிரசாத், 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் ராகுல் சொதப்பிய பின்னர், மீண்டும் அவரையும் அவரது தேர்வையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், தொடக்க வீரர் கேஎல் ராகுலின் தேர்வு விமர்சனத்துக்கும் கேள்விக்கும் உள்ளாக்கப்பட்டது.
இங்கிலாந்து தொடரிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் நன்றாக ஆடிய ராகுல், அதன்பின்னர் ஃபார்மை இழந்தார். 2022லிருந்து டெஸ்ட்டில் ராகுலின் சராசரி வெறும் 17.4 ஆகும். 2022லிருந்து டெஸ்ட்டில் ஒரு தொடக்க வீரரின் குறைந்தபட்ச சராசரி இதுதான். கேஎல் ராகுல் ஃபார்மில் இல்லாத அதேவேளையில், டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் அணியில் இருந்தும் அவரை ஆடும் லெவனில் தேர்வு செய்யாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
முதல் போட்டியில் சரியாக ஆடாமல் ராகுல் சொதப்பியதுமே, 2வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில்லைத்தான் ஆடவைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன. ராகுலின் தேர்வுக்கு எதிராக மிகக்கடுமையாக பேசியவர் வெங்கடேஷ் பிராசத் தான். ராகுல் தொடர்ச்சியாக சொதப்பியும் அவருக்கு அளவுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், அவரை டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமித்ததே தவறு என்றும், ஷுப்மன் கில் மற்றும் சர்ஃபராஸ் கான் மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ராகுலுக்கு தொடர் வாய்ப்பளிப்பதாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத்.
2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் அவர் வெறும் 17 ரன்னுக்கு நேதன் லயனின் சுழலில் எல்பிடபிள்யூ ஆகி ஏமாற்றமளித்த நிலையில், வெங்கடேஷ் பிரசாத் மீண்டும் ராகுலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
IND vs AUS: அவுட்டா இல்லையா..? சர்ச்சையை கிளப்பிய விராட் கோலியின் விக்கெட்..! கோலி அதிருப்தி
ராகுல் குறித்து கருத்து கூறியுள்ள வெங்கடேஷ் பிரசாத், இந்தியாவின் 2வது சிறந்த தொடக்க வீரர் (ரோஹித்துக்கு அடுத்து) ராகுல் தான் என்று இந்திய அணி நிர்வாகம் நினைக்கிறது. அவர் தான் நாட்டின் சிறந்த ஓபனர் என்று நினைக்கின்றனர். அவரது தேர்வு அநீதி. கடந்த 5 ஆண்டுகளில் 47 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி வெறும் 27. அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பது, இந்தியாவில் வேறு திறமைசாலிகளே இல்லாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்று வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார்.