மகளிர் டி20 உலக கோப்பை: ஸ்மிரிதி மந்தனாவின் போராட்ட அரைசதம் வீண்..! இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
மகளிர் டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், க்ரூப் பி-யில் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் இன்றைய போட்டியில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய மகளிர் அணி:
ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.
IND vs AUS: அவுட்டா இல்லையா..? சர்ச்சையை கிளப்பிய விராட் கோலியின் விக்கெட்..! கோலி அதிருப்தி
இங்கிலாந்து மகளிர் அணி:
சோஃபியா டன்க்லி, டேனியல் வியாட், அலைஸ் கேப்ஸி, நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), கேத்ரின் பிரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், சாரா க்ளென், லாரன் பெல்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் டாப் 3 வீராங்கனைகளையும் இந்திய ஃபாஸ்ட் பவுலர் ரேணுகா சிங் வீழ்த்தினார். சோஃபியா(10), வியாட்(0), அலைஸ்(3)ஆகிய மூவரையும் தொடக்கத்திலேயே ரேணுகா சிங் வீழ்த்தினார். 4ம் வரிசையில் ஆடிய அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை நாட் பிரண்ட் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். 50 ரன்களுக்கு அவரை தீப்தி ஷர்மா வெளியேற்றினார்.
கேப்டன் ஹீதர் நைட் 28 ரன்களும், அடித்து ஆடிய எமி ஜோன்ஸ் 27 பந்தில் 40 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் இங்கிலாந்து அணி 151 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 152 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரேணுகா சிங் 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
152 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று பேட்டிங் ஆட, மறுமுனையில் ஷஃபாலி வெர்மா(8), ஜெமிமா ரோட்ரிக்ஸ்(13), கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர்(4) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இறங்கிய ரிச்சா கோஷ் சிறப்பாக ஆடினார். அரைசதம் அடித்து போராடிய ஸ்மிரிதி மந்தனா 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் 34 பந்தில் 47 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தும் கூட, இந்திய அணி 20 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே அடித்தது. 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, க்ரூப் பி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது.