IND vs AUS: டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே அஷ்வினை நினைத்து அலறும் ஆஸி., தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை எதிர்கொள்வது குறித்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா பேசியிருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.
கடைசியாக 2004ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி அதன்பின்னர் 19 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதற்கிடையே, இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. எனவே இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவிற்கு வந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதாகமாக இருக்கும் என்பதால் 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளில் எந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களோ, எந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னை சிறப்பாக எதிர்கொள்கிறார்களோ அந்த அணி தான் வெற்றி பெறும்.
இந்திய ஆடுகளங்களில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய ஸ்பின்னர்களை எதிர்கொள்வது மிகச்சவாலான காரியம். இந்திய ஸ்பின்னர்களை, குறிப்பாக அஷ்வினை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்நாட்டு முன்னாள் வீரர்கள் பலரும் ஆலோசனை கூறிவருகின்றனர்.
இந்நிலையில், அஷ்வினை எதிர்கொள்வது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, அஷ்வின் துப்பாக்கி மாதிரி.. மிகத்திறமையான வீரர். பவுலிங்கில் சின்ன சின்னதாக நிறைய வேறுபாடு காட்டக்கூடிய பவுலர். க்ரீஸை நன்கு பயன்படுத்தி பந்துவீசுபவர். ஒரு ஆஃப் ஸ்பின்னரை எப்படி ஆடுவது என்று முன்பு என்னை கேட்டிருந்தால் கண்டிப்பாக எனக்கு தெரியாது. ஆனால் இப்போது ஸ்பின்னை எப்படி ஆடவேண்டும் என்று கற்றிருக்கிறேன்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும்..? மஹேலா ஜெயவர்தனே ஆருடம்
இந்தியாவில் முதல் நாளிலோ அல்லது 3-4வது நாளிலோ பந்து நன்றாக சுழலும். அதனால் அஷ்வின் நிறைய ஓவர்கள் பந்துவீசுவார். கண்டிப்பாக அவரை எதிர்கொள்வது கடும் சவாலாக இருக்கும். எனவே அவரை எப்படி எதிர்கொண்டு ஆடி ஸ்கோர் செய்கிறோம் என்பது மிக முக்கியம். அவரது பவுலிங்கை சமாளித்து நீண்டநேரம் ஆடினால் அவரது திட்டத்தை மாற்றவேண்டிய கட்டாயம் உருவாகும் என்றார் உஸ்மான் கவாஜா.