ODI உலக கோப்பையில் ஆட இந்தியாவுக்கு வரமாட்டாங்களா..? பாகிஸ்தான் சும்மா வாய் உதார் தான்.. அஷ்வின் அதிரடி
ஆசிய கோப்பையில் ஆட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலக கோப்பையில் ஆட பாகிஸ்தானும் இந்தியாவிற்கு வராது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறும். ஆனால் கண்டிப்பாக அது சாத்தியமில்லை என்று ரவிச்சந்திரன் அஷ்வின் ரொம்ப வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பரஸ்பர இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானிலும், ஒருநாள் உலக கோப்பை இந்தியாவிலும் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்க முடியாது. இந்திய அரசாங்கம் தான் முடிவு எடுக்கும். அதன்படிதான் பிசிசிஐ செயல்பட முடியும். இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப அரசு அனுமதிக்காது என்பதால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. ஆசிய கோப்பை தொடர் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 5 ஓபனிங் பார்ட்னர்ஷிப்..! டாப் 5ல் 2 இந்திய ஜோடிகள்
ஜெய் ஷாவின் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிருப்திக்குள்ளாக்கியது. ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை தங்களிடம் இருக்கும்போது, ஜெய் ஷா தன்னிச்சையாக பேசியதற்கு பாக்., கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்ததுடன், எக்காரணத்தை முன்னிட்டும் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுத்தரமுடியாது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர விரும்பவில்லை என்றால், ஆசிய கோப்பையில் ஆடாமல் இருக்கட்டும். இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் பாகிஸ்தானும் கலந்துகொள்ளாது என்று பாக்., கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க, அண்மையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீட்டிங் பஹ்ரைனில் நடந்தது. இந்த கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மார்ச் மாதம் மீண்டும் இதுகுறித்து விவாதிக்கப்படவுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜாவின் கருத்தைத்தான் இப்போதைய தலைவர் நஜாம் சேதியும் தெரிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீட்டிங்கில், பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பையில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து இந்திய அரசிடம் கலந்தாலோசித்து, அடுத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீட்டிங்கிற்கு முன் பிசிசிஐ தெரியப்படுத்த வேண்டும். இந்திய அணி ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் ஆட பாகிஸ்தானும் வராது என்று நஜாம் சேதி தெரிவித்திருந்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும்..? மஹேலா ஜெயவர்தனே ஆருடம்
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின், பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாவிட்டால், நாங்களும் இந்தியவிற்கு வரமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகிறது. ஆனால் பாகிஸ்தான் இப்படி கூறுவதை இதற்கு முன் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்தக்கூடாது என்று நாம் கூறினால், அவர்களும் இந்தியாவிற்கு வரமாட்டோம் என்பார்கள். ஆனால் அதெல்லாம் சாத்தியமே இல்லை என்பதுதான் என் கருத்து. ஆசிய கோப்பை இலங்கைக்கோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கோ மாற்றப்படலாம். இலங்கைக்கு மாற்றப்பட்டால் எனக்கு மகிழ்ச்சி என்றார் அஷ்வின்.