இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும்..? மஹேலா ஜெயவர்தனே ஆருடம்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபியை எந்த அணி வெல்லும் என்று இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே ஆருடம் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் தொடர் இதுவென்பதால் இது முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2ம் இடத்திலும் உள்ளன. இந்த தொடரை 2-0 அல்லது 2-1 அல்லது 3-1 என வென்றால் இந்திய அணி புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை வலுவாக பிடித்து ஃபைனலுக்கு முன்னேறலாம்.
IND vs AUS: ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் ஜான்சனின் கேம் சேஞ்சிங் அட்வைஸ்
2004ம் ஆண்டுக்கு பின் இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. ஆனால் அதேவேளையில், இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்ற 2 சுற்றுப்பயணங்களிலும் டெஸ்ட் தொடர்களை அடுத்தடுத்து வென்று வரலாற்று சாதனை படைத்தது. எனவே இந்த முறை இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
சொந்த மண்ணில் மிக வலுவான மற்றும் வீழ்த்துவதற்கு கடினமான இந்திய அணியை டெஸ்ட்டில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. 2004ம் ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் டெஸ்ட் தொடரில் தோற்றிராத இந்திய அணி, 2012ம் ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் எந்த அணியிடமும் டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை. அந்தளவிற்கு சொந்த மண்ணில் வலுவானது இந்திய அணி.
இந்த முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஆகிய 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த வலுவான அணிகளாக திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும். இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு எளிதல்ல.
இந்நிலையில், இந்த தொடரை எந்த அணி வெல்லும் என்று இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே ஆருடம் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஜெயவர்தனே, இது மிகச்சிறந்த டெஸ்ட் தொடராக இருக்கும். இந்திய கண்டிஷனில் ஸ்பின்னர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் மற்றும் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது முக்கியம். இந்த தொடரை எந்த அணி வெற்றியுடன் தொடங்குகிறதோ, அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இந்த தொடரை எந்த அணி ஜெயிக்கும் என்பதை கணிப்பது மிகக்கடினம். ஆஸ்திரேலிய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வெல்லும் என்று ஜெயவர்தனே கணித்துள்ளார்.