ஐயய்யோ அவரா? ஆஸி.யின் அதிரடி நாயகனின் பிட்டால் கலக்கத்தில் ரோகித் படை
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டிக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் தயாராக உள்ளது. நாளை காலை 5 மணிக்கு போட்டி தொடங்கும், தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் போராடும் நிலையில் காயமடைந்த டிராவிஸ் ஹெட் ஃபிட்டாக இருப்பது டீம் இந்தியாவின் தலைவலியை அதிகரித்துள்ளது.
Boxing Day Test: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் முக்கியமான போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் (Melbourne Cricket Ground) மைதானம் தயாராக உள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளும் தயாராக உள்ளன. நாளை இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு ஹை-வோல்டேஜ் டெஸ்ட் போட்டி தொடங்கும். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன, இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது. காபா டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததால், இப்போது பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வென்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் ஆர்வமாக உள்ளன.
இந்தியாவின் தலைவலி டிராவிஸ் ஹெட்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட்டில் (Test Cricket) அதிரடி சதம் அடித்த டிராவிஸ் ஹெட் சிறிது காலம் உடற்தகுதி பிரச்சினையை சந்தித்தார். டிராவிஸ் ஹெட் சற்று காயமடைந்ததால், நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவை மிகவும் சோதிக்கும் டிராவிஸ் ஹெட் இப்போது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்பு முழுமையாக ஃபிட்டாகி, டீம் இந்தியாவின் தலைவலியை அதிகரித்துள்ளார்.
இடதுகை அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் (Border Gavaskar Trophy) தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் மூன்று போட்டிகளுக்குப் பிறகு தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். கடந்த மூன்று போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் விளையாடிய டிராவிஸ் ஹெட் 81.80 பேட்டிங் சராசரியில் 409 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதமும் அடங்கும்.
பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு ஆஸி. அணியில் இரண்டு மாற்றங்கள்:
காபா டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆஸி. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். எனவே ஹேசல்வுட்டின் இடத்திற்கு மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் அணியில் இணைந்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வெல் தொடர்ந்து தோல்வியடைந்ததால் அவரை நீக்கி மற்றொரு திறமையான இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.