IPL 2023: இந்த லெட்சணத்துல பேட்டிங் ஆடினால் டீம் ஸ்கோர் எப்படி உயரும்..? விராட் கோலியை விளாசிய டாம் மூடி
விராட் கோலி மிடில் ஓவர்களில் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுவதால் மிடில் ஓவர்களில் அவரது ஸ்டிரைக் ரேட் மிகக்குறைவாக உள்ள நிலையில், அதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் டாம் மூடி.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டியில் ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடினார். அதனால் அந்த போட்டியில் விராட் கோலி தான் கேப்டன்சி செய்தார்.
அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஃபாஃப் டுப்ளெசிஸ் (84) மற்றும் விராட் கோலி (59) ஆகிய இருவரின் அரைசதங்களால் 20 ஓவரில் 174 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி. முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 137 ரன்களை சேர்த்தனர். ஆனாலும் ஆர்சிபி அணியால் 20 ஓவரில் 174 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 150 ரன்கள் மட்டுமே அடித்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால் அந்த போட்டியில் ஆர்சிபி அணியின் பலவீனங்கள் அம்பலப்பட்டன.
மிடில் ஆர்டர் பலவீனம் வெளிப்பட்டது. குறிப்பாக, விராட் கோலி மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறுகிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஃபாஸ்ட் பவுலர்களை 165 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிய கோலி, ஸ்பின்னர்களை வெறும் 76 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடினார். மேலும் 2020லிருந்து மிடில் ஓவர்களான 7-9 ஓவர்களில் அவரது ஸ்டிரைக் ரேட் வெறும் 95 மட்டுமே.
இந்நிலையில், விராட் கோலியின் மிடில் ஓவர் பேட்டிங் குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி, விராட் கோலி மிடில் ஓவர் ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டும். விராட் கோலி மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை அடித்து ஆடாமல் கடைசிவரை களத்தில் நிற்பதில் பிரயோஜனமில்லை. ஏனெனில் அணியின் ஸ்கோர் முக்கியம். முதல் விக்கெட்டுக்கு 137 ரன்களை ஆர்சிபி அணி குவித்தது. 125 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி செட்டில் ஆன ஒரு பேட்ஸ்மேன், அதன்பின்னர் அடித்து ஆடி ஸ்டிரைக் ரேட்டை அதிகரிக்க வேண்டும். மிடில் ஓவர்களில் கோலி மந்தமாக ஆடுகிறார் என்று டாம் மூடி சாடினார்.