2011 உலகக் கோப்பையில் தோனி அடித்த சிக்ஸர் விழுந்த இடத்தை நினைவுச் சின்னமாக மாற்றிய வான்கடே ஸ்டேடியம்!
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸர் விழுந்த இடத்தில் மும்பை கிரிக்கெட் வாரியம் நினைவுச் சின்னமாக மாற்றியுள்ளது.
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது. டி20 உலகக் கோப்பை, ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று வந்தாலும் உலகக் கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்தியா அதன் பிறகு உலகக் கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இந்த முறை கண்டிப்பாக உலகக் கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக மகிலா ஜெயவர்தனே 103 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து ஆடிய இந்திய அணிக்கு சேவாக் (0), சச்சின் (18), காம்பிர் (97), விராட் கோலி (35) என்று ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
அதன் பிறகு தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். 48.2ஆவது ஓவரில் தோனி சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் சிக்ஸருடன் பினிஷிங் செய்த முதல் வீரர் என்ற வரலாற்றையும் தோனி படைத்தார். இந்நிலையில் உலகக் கோப்பை ஃபைனலில் தோனி அடித்த சிக்சர் விழுந்த இருக்கைக்கு அவருடைய பெயரை சூட்டி கௌரவித்துள்ளது. குறிப்பாக தோனியின் பெயர் நிரந்தரமாக பொறிக்கப்படும் அந்த இருக்கைகள் ஜே 282 முதல் ஜே 286 வரையிலான இருக்கைகள் இனி காலத்திற்கும் வேறு எந்த ரசிகரும் அமராத வகையில் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டுள்ளது.
அந்த 6 இருக்கைகளை நீக்கப்பட்டு அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் போது இதற்கான பணியை தொடங்கி வைத்தார். தற்போது அந்தப் பணிகள் முடிந்து நினைவுச் சின்னம் தயாராகியுள்ளது. நாளை 21 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பையின் 20ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.