தமிழக வீரர்கள் இந்திரஜித், பிரதோஷ், விஜய் சங்கர் அபார சதம்! முதல்இன்னிங்ஸில் பெரும் பின்னடைவை மீறி போட்டி டிரா
மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் பின் தங்கிய போதிலும், 2வது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் ஆடி போட்டியை டிரா செய்தது தமிழ்நாடு அணி.
ரஞ்சி தொடரில் தமிழ்நாடு - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியின் சாய் சுதர்சன் (0), சாய் கிஷோர் (0), ஜெகதீசன் (23), அபரஜித் (8), இந்திரஜித்(9) ஆகியோர் சொதப்ப, மிடில் ஆர்டரில் பிரதோஷ் பால் மட்டுமே அரைசதம் அடித்தார். பிரதோஷ் பால் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் வெறும் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தமிழ்நாடு அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். மிகச்சிறப்பாக ஆடி பெரிய இன்னிங்ஸ் ஆடிய சர்ஃபராஸ் கான் 162 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் சிறப்பாக ஆடிய தனுஷ் கோட்டியான் 71 ரன்களும், மோஹித் அவஸ்தி 69 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 481 ரன்களை குவித்தது.
337 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் தோல்வியடைவதற்கான அபாயம் இருந்தது. ஒருவேளை இன்னிங்ஸ் தோல்வியடையவில்லை என்றாலும், 337 ரன்கள் பின் தங்கியிருந்ததால் தோல்விக்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸை தமிழ்நாடு வீரர்கள் அபாரமாக ஆடினார்கள். தொடக்க வீரர் சாய் சுதர்சன் 68 ரன்கள் அடித்தார்.
மிடில் ஆர்டரில் இந்திரஜித், பிரதோஷ் பால், விஜய் சங்கர் ஆகிய மூவரும் அபாரமாக ஆடி சதமடித்தார்கள். இந்திரஜித் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் தலா 103 ரன்கள் அடித்தனர். பிரதோஷ் பால் 169 ரன்களை குவிக்க, 2வது இன்னிங்ஸில் 548 ரன்களை குவித்தது தமிழ்நாடு அணி.
டி20 கிரிக்கெட்டில் அபாரமான சாதனையை படைத்து ஜடேஜாவை ஓரங்கட்டிய அக்ஸர் படேல்..!
தமிழ்நாடு அணி 211 ரன்கள் முன்னிலை பெற, 212 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு கடைசி நாள் ஆட்டத்தில் 24 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் ஆடமுடிந்ததால் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடிக்க, இந்த போட்டி டிராவில் முடிந்தது.