டி20 கிரிக்கெட்டில் அபாரமான சாதனையை படைத்து ஜடேஜாவை ஓரங்கட்டிய அக்ஸர் படேல்..!
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி 31 பந்தில் 65 ரன்களை குவித்த அக்ஸர் படேல், டி20 கிரிக்கெட்டில் 7ம் வரிசையில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில்,நேற்று புனேவில் நடந்த 2வது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் - பதும் நிசாங்கா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவரில் 80 ரன்களை குவித்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். நிசாங்கா 33 ரன்கள் அடித்தார். அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ் 31 பந்தில் 52 ரன்கள் அடித்தார். சாரித் அசலங்கா 39 ரன்கள் அடித்தார். இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா அதிரடியாக ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்தார். 22 பந்தில் ஷனாகா 56 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 206 ரன்களை குவித்தது இலங்கை அணி.
207 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 57 ரன்களுக்கே இஷான் கிஷன், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய வீரர்களும் ஆட்டமிழந்துவிட்டனர். அதன்பின்னர் சூர்யகுமாரும் அக்ஸர் படேலும் இணைந்து அபாரமாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 6வது விக்கெட்டுக்கு 42 பந்தில் 90 ரன்களை குவித்தனர். 51 ரன்னில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க, 31 பந்தில் 65 ரன்களை குவித்து கடைசி வரை போராடிய அக்ஸர் படேல் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 190 ரன்கள் அடித்த இந்திய அணி, கடுமையாக போராடி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
20 பந்தில் அரைசதம் அடித்த அக்ஸர் படேல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ரோஹித், கோலியின் சர்வதேச டி20 கெரியர் ஓவர்..! மௌனம் கலைத்தார் ராகுல் டிராவிட்
மேலும், ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த அக்ஸர் படேல், ஜடேஜாவின் சாதனையையே முறியடித்துள்ளார். 7ம் வரிசையில் இறங்கி 31 பந்தில் 65 ரன்களை குவித்த அக்ஸர் படேல், 7ம் வரிசையில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் 2020ம் ஆண்டு ஜடேஜா 7ம் வரிசையில் இறங்கி அடித்த 44 ரன்களே சாதனையாக இருந்தது. ஜடேஜாவின் அந்த சாதனையை அக்ஸர் படேல் முறியடித்துள்ளார்.