ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக வச்சுகிட்டு இதுதான் நீங்க ஃபீல்டிங் பண்ற லெட்சணமா..? கோலியை விளாசிய கவாஸ்கர்
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் விராட் கோலி மோசமாக ஃபீல்டிங் செய்து ஸ்லிப்பில் கேட்ச்களை தவறவிட்ட நிலையில், இந்திய அணியின் ஃபீல்டிங்கை விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றிருந்தாலும், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்ததை சுட்டிக்காட்டி கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
கவாஸ்கர் விமர்சனம் செய்ததற்கு முக்கிய காரணம், சீனியர் வீரர் விராட் கோலி கேட்ச்களை தவறவிட்டதுதான். 2வது டெஸ்ட்டில் 2வது இன்னிங்ஸில் வங்கதேச அணியில் அதிக ரன்கள் அடித்தது லிட்டன் தாஸ் தான். அவர் அதிக ரன்கள் அடிக்க காரணம், விராட் கோலி கேட்ச்சை கோட்டைவிட்டதுதான்.
ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்த விராட் கோலி, அக்ஸர் படேலின் பவுலிங் மற்றும் அஷ்வின் பவுலிங் ஆகிய இருவரின் பவுலிங்கிலும் லிட்டன் தாஸின் கேட்ச்களை தவறவிட்டார். அவை இரண்டும் சற்று கடினமான கேட்ச்கள் தான் என்றாலும், விராட் கோலி லெவலுக்கு அவற்றை பிடித்திருக்க வேண்டும்.
விராட் கோலி கேட்ச் தவறவிட்டதையடுத்து, இந்திய ஸ்லிப் ஃபீல்டர்களின் டெக்னிக்கை விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ஸ்லிப் ஃபீல்டர்கள் நிமிர்ந்து நின்று கைகளை முழங்காலில் வைத்து நிற்கின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்ச்களுக்கு மேல் பிடித்த ஒரே இந்திய வீரரும், மிகச்சிறந்த ஸ்லிப் ஃபீல்டருமான ராகுல் டிராவிட். சிறந்த ஃபீல்டருமான ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக வைத்துக்கொண்டு இந்திய அணி இப்படி ஃபீல்டிங் செய்வதை பார்க்க வியப்பாக இருக்கிறது என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.