கரீபியன் பிரீமியர் லீக் 2020 தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடந்துவருகிறது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயிண்ட் லூசியா ஜோக்ஸ் ஆகிய இரு அணிகளும் இறுதி போட்டிக்கு முன்னேறின. 

இறுதி போட்டி டிரினிடாட்டில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டிரின்பாகோ அணி, செயிண்ட் லூசியா அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய செயிண்ட் லூசியா அணி 170-180 ரன்கள் அடித்திருக்க வேண்டிய நிலையில், டெத் ஓவர்களில் ஸ்கோர் செய்யாமல் விக்கெட்டுகளை இழந்ததால் 154 ரன்களை மட்டுமே அடித்தது. 

செயிண்ட் லூசியா அணியின் தொடக்க வீரர்களாக கார்ன்வாலும் மார்க் டெயாலும் களமிறங்கினர். கார்ன்வால் வெறும் 8 ரன்களில் 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மார்க் டெயாலுடன் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே ஃப்ளெட்சர் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். டெயாலும் ஃப்ளெட்சரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 7 ஓவரில் 67 ரன்களை சேர்த்தனர். மார்க் டெயால் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி 27 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் அடித்த ஃப்ளெட்சர் 12வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

12வது ஓவரின் முதல் பந்தில் ஃப்ளெட்சர் அவுட்டாகும்போது, செயிண்ட் லூசியா அணியின் ஸ்கோர் 89. அதன்பின்னர் ரோஸ்டான் சேஸ் 22 ரன்னிலும் நஜிபுல்லா ஜாட்ரான் 24 ரன்களிலும் ஆட்டமிழக்க, 15வது ஓவரிலேயே 120 ரன்களை கடந்துவிட்டது செயிண்ட் லூசியா அணி. எஞ்சிய 5 ஓவரில் 40-50 ரன்கள் அடித்திருக்கலாம். விக்கெட்டும் கையில் இருந்தது. ஆனால் அதன்பின்னர் முகமது ஷமி, கேப்டன் டேரன் சமி ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, டெயிலெண்டர்களும் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 19.1 ஓவரில் 154 ரன்களுக்கு சுருண்டது செயிண்ட் லூசியா அணி. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு மிரட்டலாக பந்துவீசி 4 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, டிரின்பாகோ அணியை பெரிய ஸ்கோர் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்த உதவினார்.

Also Read - ஐபிஎல் 2020: சிஎஸ்கேவில் ரெய்னாவுக்கு மாற்று வீரர் இவருதான்..! ஷேன் வாட்சன் அதிரடி

155 என்ற ரெண்டுங்கெட்டான் இலக்கை டிரின்பாகோ அணிக்கு நிர்ணயித்துள்ளது. இது கடினமான ஸ்கோரும் அல்ல; அதேவேளையில் எளிதான ஸ்கோரும் அல்ல. எனவே இந்த போட்டியில் வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். 

Also Read - ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசனில் மரண அடி விழுவது உறுதி.. காரணம் இதுதான்