ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி மும்பை இந்தியன்ஸ். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 4 முறை ஐபிஎல் டைட்டிலை வென்று, வெற்றிகரமான அணியாக கோலோச்சுகிறது. கடந்த முறை டைட்டிலை வென்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

ரோஹித் சர்மா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, பும்ரா, க்ருணல் பாண்டியா, மலிங்கா என கோர் டீம் வலுவாக இருப்பதுதான் அந்த அணி ஐபிஎல்லில் கோலோச்ச முக்கியமான காரணம். இந்த சீசனில் மலிங்கா ஆடவில்லை. அவர் ஆடவில்லையென்றாலும், அந்த அணிக்கு பாதிப்பில்லாத அளவிற்கு வலுவான வீரர்களை பெற்றுள்ளது. 

பேட்டிங், ஆல்ரவுண்டர், ஃபாஸ்ட் பவுலிங் என அனைத்து வகையிலும் நல்ல கலவையிலான சிறந்த மற்றும் வலுவான அணியாகவே எப்போதுமே திகழ்கிறது மும்பை இந்தியன்ஸ். ஆனால் இந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளதால், அங்கிருக்கும் ஆடுகளங்களை பயன்படுத்தி அசத்தக்கூடிய அளவிற்கான தரமான மற்றும் அனுபவம் வாய்ந்த ஸ்பின் பவுலிங் யூனிட் மும்பை இந்தியன்ஸ் அணியில் இல்லையென்றும், அதுதான் அந்த அணிக்கு பெரிய பிரச்னையாக அமையப்போகிறது என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. எனவே அதை கருத்தில்கொண்டால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் ஸ்பின் பவுலிங் பற்றாக்குறை தான் பெரிய பிரச்னையாக இருக்கப்போகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 மைதானங்கள் தான் உள்ளன. போகப்போக அங்கிருக்கும் ஆடுகளங்களின் தன்மை மாறும். தொடரின் பிற்பாதியில் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக ஆடுகளங்கள் மாறும். அப்போது நல்ல ஸ்பின் பவுலர்களை பெற்றிருக்கும் அணிகள் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் மும்பை இந்தியன்ஸில் ஸ்பின் பவுலிங்கில் நல்ல டெப்த் கிடையாது. மும்பை இந்தியன்ஸில் தரம் மற்றும் எண்ணிக்கை ஆகிய இரண்டின் அடிப்படையிலுமே ஸ்பின்னர்களுக்கு பற்றாக்குறைதான் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸில் க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர் ஆகிய இருவரும் தான் பிரதான ஸ்பின்னர்களாக இருக்கிறார்கள். சிஎஸ்கேவை போலவே, ஆர்சிபியை போலவோ தரமான நிறைய ஸ்பின்னர்களை மும்பை இந்தியன்ஸ் பெற்றிருக்கவில்லை என்பதே எதார்த்தம்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், நேதன் குல்ட்டர்நைல், பும்ரா, டிரெண்ட் போல்ட், மிட்செல் மெக்லனகன், தவால் குல்கர்னி, ஷ்ரெஃபேன் ரூதர்ஃபோர்டு, கிறிஸ் லின், சவுரப் திவாரி, திக்விஜய் தேஷ்முக், ப்ரின்ஸ் பல்வாண்ட் ராய் சிங், மோசின் கான், ஜெயந்த் யாதவ், ஆதித்ய தரே, அன்மோல்ப்ரீத் சிங், அனுகுல் ராய்.