ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரும், அந்த அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவருமான ரெய்னா, அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால், இந்தியா திரும்பினார். பின்னர் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக ஆட  ஆர்வம் தெரிவித்தார். ஆனாலும் அவர் இந்த சீசனில் ஆடுவாரா இல்லையா என்பது தெரியவில்லை. ரெய்னா இந்த சீசனில் ஆடுவதற்கான வாய்ப்பு மிக மிகக்குறைவு என்பதே நிதர்சனம்.

சிஎஸ்கே அணியில் 2008ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் ரெய்னா, அந்த அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அந்த அணியின் செல்லப்பிள்ளையாகவே இருந்துவந்தார். ஐபிஎல்லில் அதிகமான போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமைக்குரியவரான ரெய்னா, ஐபிஎல்லில் 137.14 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 5368 ரன்களை குவித்து, ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார்.

ரெய்னாவின் இழப்பு சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பு. எனவே ரெய்னா இறங்கிய 3ம் வரிசையில் யாரை இறக்கலாம் என்று பலரும் ஆலோசனை தெரிவித்துவருகின்றனர். கவுதம் கம்பீர், தோனி 3ம் வரிசையில் இறங்கலாம் என்றார். இது தோனிக்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் சில முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில், அதுகுறித்து ரெய்னாவே, தனது கருத்தையும் தெரிவித்திருந்தார். தோனியே 3ம் வரிசையில் இறங்கவேண்டும் என்று ரெய்னா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கேவின் மேட்ச் வின்னர்களில் ஒருவரான ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னாவின் இடத்தை நிரப்புவது மிக மிகக்கடினம். ஐபிஎல்லில் 2வது அதிகபட்ச ஸ்கோரை அடித்தவர் ரெய்னா. ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக வெயில் இருப்பதால், ஆடுகளங்கள் வறண்டு ஸ்பின்னுக்கு சாதகமாக அமையும்.  ரெய்னா ஸ்பின் பவுலிங்கை மிகச்சிறப்பாக ஆடக்கூடியவர். அதனால் அவரைப்போலவே ஸ்பின்னை திறம்பட ஆடக்கூடிய முரளி விஜய் மாதிரியான வீரரை மாற்று வீரராக இறக்கலாம். முரளி விஜய்க்கு கடந்த சில ஆண்டுகளாகவே டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் முரளி விஜய் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.