Sri Lanka Cricket Board: விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்!
விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை பதவியிலிருந்து நீக்கி அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான 33ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதன் காரணமாக, கடந்த 6ஆம் தேதி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, இலங்கை அணியின் முன்னாள் வீரரும், 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்று கொடுத்தவருமான, அர்ஜூன ரணதுங்க தலைமையில் தற்காலிகமாக குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அந்த 7 பேர் கொண்ட குழுவில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, இலங்கை கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து வாரிய தலைவராக இருந்த ஷம்மி சில்வா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாரியம் கலைக்கப்பட்டதை 2 வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. வாரியத்தை கலைத்த விளையாட்டுத்துறை அமைச்சரை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கண்டித்தார். அதோடு, தற்காலிக குழுவை கலைக்குமாறும் உத்தரவிட்டார்.
ஆனால், அதற்கு ரோஷன் ரணசிங்கே மறுப்பு தெரிவிக்கவே, அவரை பதவியிலிருந்து நீக்கி ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ரோஷன் ரணசிங்கே கூறியிருப்பதாவது: தற்காலிகமாக நியமிக்கப்பட குழுவை கலைக்குமாறு அதிபர் கூறினார். அப்படியில்லையென்றால் தனது தலைமையின் கீழ் விளையாட்டு துறை சட்டம் இயற்றப்படும் என்று எச்சரித்தார். ஆனால், நான் குழுவை கலைக்க முடியாது, வேண்டுமென்றால் என்னை நீக்குங்கள் என்று கூறினேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் தன் அவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.