டி20 உலக கோப்பை: வாழ்வா சாவா போட்டியில் யு.ஏ.இ அணியை எளிதாக வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்ட இலங்கை அணி, 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

sri lanka beat uae by 79 runs in t20 world cup

டி20 உலக கோப்பை தகுதிப்போட்டிகள் நடந்துவருகின்றன. க்ரூப் ஏ-வில் இடம்பெற்று நமீபியாவிடம் முதல் போட்டியில் தோற்ற இலங்கை அணி, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை இன்று எதிர்கொண்டது. 

ஜீலாங்கில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்.. புதிய நிர்வாகிகளின் முழு பட்டியல்

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, பானுகா ராஜபக்சா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்‌ஷனா.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். மெண்டிஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் நிசாங்காவுடன் ஜோடி சேர்ந்த தனஞ்செயா டி சில்வா அதிரடியாக ஆடி21 பந்தில் 33 ரன்களை விளாசி ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அதிரடியாகவும் அதேவேளையில் பொறுப்புடனும் ஆடிய பதும் நிசாங்கா அரைசதம் அடித்தார். 14 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இலங்கை அணியை ஒரே ஓவரில் சரித்தார் அமீரக அணியில் ஆடும் தமிழகத்தை சேர்ந்த ரிஸ்ட் ஸ்பின்னர் கார்த்திக் மெய்யப்பன்.

15வது ஓவரை வீசிய கார்த்திக் மெய்யப்பன், முதல் 3 பந்தில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 4வது பந்தில் ராஜபச்சாவை(5) வீழ்த்திய கார்த்திக் மெய்யப்பன், 5வது பந்தில் சாரித் அசலங்கா(0) மற்றும் கடைசி பந்தில் தசுன் ஷனாகா(0) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். தொடர்ச்சியாக ராஜபக்சா, அசலங்கா, ஷனாகா ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

டி20 உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 5வது பவுலர் என்ற சாதனையை படைத்தார் கார்த்திக் மெய்யப்பன். அதன்பின்னர் இலங்கை அணியின் ஸ்கோர் வேகம் குறைந்தது. 18வது ஓவரில் நிசாங்கா சில பவுண்டரிகளை அடிக்க, 20 ஓவரில் 152  ரன்களை அடித்தது. இலங்கை ஆடிய வேகத்திற்கு கண்டிப்பாக 190 ரன்களுக்கு மேல் அடித்திருக்கலாம். ஆனால் அமீரக பவுலர்கள் 15வது ஓவரிலிருந்து கடைசி 6 ஓவர்களை அருமையாக வீசி இலங்கை அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினர்.

இதையும் படிங்க - 2023 ஆசிய கோப்பை: இந்திய அணி பாகிஸ்தானுக்கு போகாது.. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்ட அறிவிப்பு

153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அமீரக அணியின் 3 விக்கெட்டுகளை துஷ்மந்தா சமீரா பவர்ப்ளேயில் வீழ்த்தி கொடுத்தார். அதன்பின்னர் அனுபவமற்ற அமீரக அணியின் பேட்டிங் ஆர்டரை ஹசரங்கா மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா இணைந்து சரித்தனர். 17.1 ஓவரில் அமீரக அணி வெறும் 73 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios