ஜேசன் ராயின் அதிரடி சதம் வீண்.. சீட்டுக்கட்டாய் சரிந்த இங்கி., மிடில் ஆர்டர்..! தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ராசி வாண்டர்டசன், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், வைன் பார்னெல், சிசாண்டா மகளா, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷம்ஸி.
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சாம் கரன், டேவிட் வில்லி, அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆலி ஸ்டோன்.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களை சேர்த்தனர். பவுமா 36 ரன்களுக்கும், டி காக் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய வாண்டர்டசன் நிலைத்து நின்று அடித்து ஆட, மறுமுனையில் மார்க்ரம் (13), ஹென்ரிச் கிளாசன்(30) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் மற்ற வீரர்கள் சிறிய ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிய வாண்டர்டசன் சதமடித்தார். வாண்டர்டசனும் டேவிட் மில்லரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 110 ரன்களை குவித்தனர். வாண்டர்டசன் 117 பந்தில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய டேவிட் மில்லர் அரைசதம் அடித்தார். 53 ரன்கள் அடித்த டேவிட் மில்லர் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 50 ஓவரில் 298 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்க அணி.
299 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் டேவிட் மலான் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 19.3 ஓவரில் 146 ரன்களை குவித்தனர். டேவிட் மலான் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அடித்து ஆடிய ஜேசன் ராய் சதமடித்தார். அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் 91 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 113 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் ஜேசன் ராய்.
3ம் வரிசையில் இறங்கிய பென் டக்கெட் (3), 4ம் வரிசையில் இறங்கிய ஹாரி ப்ரூக்(0) ஆகிய இருவரும் சொதப்பினர். 113 ரன்களுக்கு 4வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார் ஜேசன் ராய். ஜேசன் ராய் ஆட்டமிழந்த பிறகு, ஜோஸ் பட்லர்(36), மொயின் அலி (11), சாம் கரன் (17), டேவிட் வில்லி(8) ஆகிய அனைவருமே சொதப்ப, மளமளவென விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 44.2 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இன்னும் 6 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு வெறும் 28 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் இங்கிலாந்து மிடில் ஆர்டர் சீட்டுக்கட்டு போல் சரிந்ததால் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.
அபாரமாக பந்துவீசிய நோர்க்யா 4 விக்கெட்டுகளும், மகாளா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.