Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடம்

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடி 205 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, வங்கதேசத்தை 101 ரன்களுக்கு சுருட்டி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

south africa beat bangladesh by 104 runs in t20 world cup
Author
First Published Oct 27, 2022, 1:13 PM IST

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வைன் பர்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, டப்டைஸ் ஷம்ஸி.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் தரமான முடிவு

வங்கதேச அணி:

நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், நூருல் ஹசன், மொசாடெக் ஹுசைன், டஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா ஃபார்மில் இல்லாத நிலையில், இந்த போட்டியிலும் வெறும் 2 ரன்னுக்கு வெளியேறினார். அதன்பின்னர் டி காக்குடன் ஜோடி சேர்ந்த ரைலீ ரூசோ வங்கதேச பவுலிங்கை அடித்து நொறுக்கினார்.

டி காக் மற்றும் ரூசோ ஆகிய இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து விளாசி ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு ரூசோ - டி காக் இருவரும் இணைந்து 81 பந்தில் 168 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த டி காக் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி சதமடித்த ரைலீ ரூசோ, 56 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 109 ரன்களை குவித்தார்.

டி20 உலக கோப்பையில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ரைலீ ரூசோ படைத்தார். மேலும் டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த 5வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.  ரூசோ - டி காக் அதிரடியால் 20 ஓவரில் 205 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 206 ரன்களை வங்கதேசத்துக்கு இலக்காக நிர்ணயித்தது.
 
206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ஷாண்டோ(9), சௌமியா சர்க்கார்(15), ஷகிப் அல் ஹசன்(1) ஆகிய மூவரையும் சொற்ப ரன்களுக்கு வீழ்த்தினார் அன்ரிக் நோர்க்யா. அஃபிஃப் ஹுசைனை ரபாடா ஒரு ரன்னுக்கு வெளியேற்றினார். லிட்டன் தாஸ் மட்டுமே 34 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டாப் ஆர்டரை நோர்க்யா சரிக்க, மிடில் ஆர்டரை ஸ்பின்னர் ஷம்ஸி சரித்தார். எந்த வீரரும் சரியாக ஆடாததால் 16.3 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது வங்கதேசம்.

இதையும் படிங்க - சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி

இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஸ்பின்னர் ஷம்ஸி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 3 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios