இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்துவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால், தொடரின் முடிவை தீர்மானிக்கும் இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. வார்னர் மற்றும் கேப்டன் ஃபின்ச் தொடக்க வீரர்களாக இறங்கினர். வார்னரை ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே வெறும் 3 ரன்களில் வெளியேற்றினார் ஷமி. ஷமியின் பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வார்னர் நடையை கட்டினார். 

இதையடுத்து கேப்டன் ஃபின்ச்சும் ஸ்மித்தும் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், சரியான புரிதல் இல்லாமல் ரன் ஓடியதன் விளைவாக, ஃபின்ச் 19 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு சென்றார். 9வது ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட ஸ்மித், அந்த பந்தை பேக்வார்டு பாயிண்ட் திசையில் அடித்தார். அதற்கு ஃபின்ச் ரன் ஓடினார். ஆனால் ஆரம்பத்தில் வேண்டாமென்று மறுத்த ஸ்மித், ஃபின்ச் ஓடிவந்ததை கண்டு அரைகுறை மனதுடன் ஓடினார். ஆனால் ஜடேஜா பந்தை பிடித்துவிட்டதால், விக்கெட்டை காப்பாற்றிக்கொள்வதற்காக மீண்டும் க்ரீஸுக்கு திரும்பினார் ஸ்மித். 

வெகுதூரம் ஓடிவந்துவிட்ட ஃபின்ச்சால் எளிதாக மறுமுனைக்கு திரும்ப முடியாமல் ரன் அவுட்டானார். ஃபின்ச் 19 ரன்களில் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 46 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் கிளாஸ் பேட்ஸ்மேன்களான ஸ்மித்தும் லபுஷேனும் ஜோடி சேர்ந்தனர். 

Also Read - போட்டி போட்டு ஒரே கிரீஸுக்கு ஓடிய ஃபின்ச் - ஸ்மித்.. ஜெயித்த ஸ்மித்.. ரன் அவுட்டான ஃபின்ச்

ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த லபுஷேன், வழக்கம்போலவே நன்றாக ஆடிய ஸ்மித்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். இருவருமே தரமான பேட்ஸ்மேன்கள் என்பதால், மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் ஆடிவருகின்றனர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ஸ்மித், இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். அவரை தொடர்ந்து லபுஷேனும் அரைசதம் அடித்தார். தனது முதல் இன்னிங்ஸான, கடந்த போட்டியில் அரைசதத்தை தவறவிட்ட லபுஷேன், இந்த முறை அந்த தவறை செய்யவில்லை. ஸ்மித்தை தொடர்ந்து அவரும் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இருவருமே தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். 

மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்து ஆடிவருகின்றனர்.