ஆட்டம் காட்டி ஏமாத்திய சுப்மன் கில், ரஹானே: ரசிகர்கள் விமர்சனம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் மற்றும் 2ஆவது டெஸ்ட் போட்டிகளில் கில் மற்றும் ரஹானே இருவரும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தான் தற்போது நடந்து வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் 6 ரன்னிலும், அஜின்க்யா ரஹானே 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சரி, முதல் போட்டியில் தான் சொதப்பிவிட்டார்களே, 2ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று அவர்கள் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால், 2ஆவது டெஸ்ட் போட்டியில் கில் 10 ரன்னிலும், ரஹானே 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். இது ரசிகர்களிடையே விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. இதில், அஜின்க்யா ரஹானே தான் துணை கேப்டன்.
ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அஜின்க்யா ரஹானேவை துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தனர். அவர் அனுபவமிக்கவர் என்பதாலும், கேப்டனாக சிறந்து விளங்கியிருக்கிறார் என்பதாலும் அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடிய ரஹானே 14 போட்டிகளில் 11 இன்னிங்ஸில் விளையாடி 326 ரன்கள் குவித்தார். இதில், அதிகபட்சமாக 71 ரன்கள் நாட் அவுட்டும் அடங்கும். இந்த ஐபிஎல் சீசனில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதிலேயும் சொதப்பிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அடுத்தடுத்து பவுண்டரி, ஆல் ஏரியாவுலேயும் ஹீரோவான ரவிச்சந்திரன் அஸ்வின்: இந்தியா 438க்கு ஆல் அவுட்!
எனினும், இந்தப் போட்டியிலும் அவர் தனது சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலமாக அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று இதுவரையில் ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடிய சுப்மன் கில் 3ஆவது வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் தனது சொதப்பல் ஆட்டத்தைத் தான் வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மீண்டும் சுப்மன் கில் ஓபனிங்கில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.