IPL 2023:ஷிகர் தவான் ஒன் மேன் ஷோ; 99* ரன் அடித்து தனி ஒருவனாக PBKS அணியை கரைசேர்த்த தவான்! SRHக்கு கடின இலக்கு
ஐபிஎல் 16வது சீசனில் சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, ஷிகர் தவானின் (99) அபாரமான பேட்டிங்கால், 20 ஓவரில் 143 ரன்கள் அடித்து 144 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசனில் இன்று ஹைதராபாத்தில் நடந்துவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் அணி, முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
மயன்க் அகர்வால், ஹாரி ப்ரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், நடராஜன், மயன்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்.
IPL 2023: பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் காயம்.. முக்கியமான அப்டேட்..! பீதியில் சிஎஸ்கே
பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சா, மேத்யூ ஷார்ட், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், சாம் கரன், ஹர்ப்ரீத் பிரார், மோஹித் ரதீ, ராகுல் சாஹர், நேதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். அவரைத்தொடர்ந்து மேத்யூ ஷார்ட்(1), ஜித்தேஷ் ஷர்மா(4) ஆகிய இருவரும் சொதப்பினர். சாம் கரன் மட்டும் தாக்குப்பிடித்து 22 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் சிக்கந்தர் ராஸா(5), ஷாருக்கான்(4), ஹர்ப்ரீத் பிரார்(1), ராகுல் சாஹர்(1) ஆகிய அனைவரும் மளமளவென ஆட்டமிழந்தனர். வெறும் 88 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஒருமுனையில் மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் மளமளவென ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிய கேப்டன் ஷிகர் தவான், 9 விக்கெட்டுகள் விழுந்த பின் அடித்து ஆடினார். அடித்து ஆடி அரைசதம் அடித்த தவான், கடைசி 5 ஓவர்களில் 28 பந்துகளை தனி ஒருவனாக எதிர்கொண்டு அபாரமாக ஆடி 66 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 99 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். ஒரு ரன் அடிக்கமுடியாமல் அவர் சதத்தை தவறவிட்டாலும், தனி ஒருவனாக பஞ்சாப் கிங்ஸை கரைசேர்த்தார் தவான். 20 ஓவரில் 143 ரன்கள் அடித்த பஞ்சாப் அணி, 144 ரன்கல் என்ற இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.