IPL 2023: ரஷீத் கானின் ஹாட்ரிக் வீண்.. கடைசி ஓவரில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங்..! GT-ஐ வீழ்த்தி KKR வெற்றி
ஐபிஎல் 16வது சீசனில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி கேகேஆருக்கு சாதனை வெற்றியை தேடிக்கொடுத்தார் ரிங்கு சிங்.
ஐபிஎல் 16வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் கேகேஆரும் மோதின. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் ஆடாததால் ரஷீத் கான் கேப்டன்சி செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரிதிமான் சஹா 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் சாய் சுதர்சனும் ஷுப்மன் கில்லும் இணைந்து பொறுப்புடன் ஆடி 2வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். கில் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த சாய் சுதர்சன் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 8 பந்தில் 16 ரன்கள் அடித்து அபினவ் மனோகர் ஆட்டமிழந்தார்.
டெத் ஓவர்களில் விஜய் சங்கர் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். லாக்கி ஃபெர்குசன் வீசிய 19வது ஒவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய விஜய் சங்கர், ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். 21 பந்தில் அரைசதம் அடித்து, ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் அடித்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 24 பந்தில் விஜய் சங்கர் 63 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 204 ரன்களை குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
205 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் (15), நாராயண் ஜெகதீசன்(8) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். இம்பேக்ட் பிளேயராக இறங்கிய வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 40 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 83 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து, 17வது ஓவரில் ஆண்ட்ரே ரசல்(1), சுனில் நரைன்(0), ஷர்துல் தாகூர் (0) ஆகிய மூவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் ரஷீத் கான். அதிரடி வீரர்கள் மூவரையும் அடுத்தடுத்து ரஷீத் கான் வீழ்த்தியதால் ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது.
ஆனால் ரிங்கு சிங், யஷ் தயால் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி கேகேஆர் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். யாருமே எதிர்பார்த்திராத விதமாக கடைசி ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்து சாதனை வெற்றியை கேகேஆருக்கு பெற்றுக்கொடுத்தார். ஐபிஎல்லில் கடைசி ஓவரில் வெற்றிகரமாக விரட்டப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான்.