பாகிஸ்தான் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்படும் பாபர் அசாம்..! உறுதிசெய்த அஃப்ரிடி
பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமிக்க வேண்டும் என்று இடைக்கால தேர்வுக்குழு தலைவர் ஷாஹித் அஃப்ரிடி கருத்து கூறியுள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்ற இடத்திற்கு உயர்ந்துவிட்ட பாபர் அசாமின் கேப்டன்சி கேள்விக்குள்ளானது. மிகச்சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார்.
பாபர் அசாமின் கேப்டன்சி அந்த அணியின் தொடர் தோல்விகள் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளானது. டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வு பாரபட்சமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. பாபர் அசாம் தனக்கு நெருக்கமான மற்றும் வேண்டப்பட்ட வீரர்களை அணியில் தேர்வு செய்ததாக விமர்சிக்கப்பட்டது.
IND vs NZ: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்..? உத்தேச ஆடும் லெவன்
அண்மையில், சக வீரர் ஒருவரை அணியில் தேர்வு செய்ய, அவரது காதலியுடன் ஆபாசமாக பேசியதாக சர்ச்சை வெடித்தது. 3 ஃபார்மட்டிலும் கேப்டன்சி செய்வதால் அவரது பேட்டிங் பாதிக்கப்படுகிறது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இப்படியாக அவரை கேப்டன்சிக்கு எதிரான கருத்துகள் வலுத்துவருகின்றன.
பாபர் அசாம் டி20 கேப்டன்சியிலிருந்து விலகி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக தொடர்ந்து, அவரது பணிச்சுமையை குறைத்துக்கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம் என ஏற்கனவே பல முறை கூறியுள்ள ஷாஹித் அஃப்ரிடி, இப்போது பாகிஸ்தான் அணியின் இடைக்கால தேர்வுக்குழு தலைவராக இருக்கும் நிலையில், இப்போதும் அதுகுறித்து கருத்து கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ஷாஹித் அஃப்ரிடி, வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம். தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. பரிசோதனைகள் செய்யப்படும்போது தோல்விகள் கிடைக்கத்தான் செய்யும். அது பெரிய விஷயம் கிடையாது. அது அனுபவத்தை தரும். ஒரு கேப்டனாக பாபர் அசாம் அவரை இன்னும் நிறைய மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. 3 ஃபார்மட்டுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க முடியாது. ஆனால் டி20க்கு மட்டும் தனி கேப்டனை நியமிக்கலாம். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக பாபர் அசாம் தொடரலாம். டி20க்கு மட்டும் தனி கேப்டனை நியமிக்கலாம். பாபர் அசாம் 2-3 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். பேட்டிங்கிலும் அபாரமான பங்களிப்பு செய்துவருகிறார். எனவே எந்த முடிவெடுத்தாலும் அவசரப்படாமல் பொறுமையாக யோசித்து தெளிவான மற்றும் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்றார் அஃப்ரிடி.