இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பியதுதான் தோல்விக்கு காரணம். 

இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள், நியூசிலாந்து அணியின் திட்டமிடப்பட்ட மற்றும் அபாரமான ஃபாஸ்ட் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அதேவேளையில் இந்திய அணியின் பவுலிங்கை நியூசிலாந்தின் டெயிலெண்டர்கள் கூட அடித்து நொறுக்கினர். 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்கள் மட்டுமே அடித்தது. முதல் இன்னிங்ஸில் மயன்க் அகர்வாலும் ரஹானேவும் மட்டுமே ஓரளவிற்கு நிலைத்து நின்று சிறப்பாக பேட்டிங் ஆடினர். அவர்கள் இருவரைத்தவிர மற்ற அனைவருமே திணறினர். கோலி, புஜாரா ஆகிய ஜாம்பவான் பேட்ஸ்மேன்களே கூட, நியூசிலாந்து அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

ஆனால் நியூசிலாந்து வீரர்களோ இந்திய அணியின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர். வில்லியம்சன் 89 ரன்களையும் டெய்லர் 44 ரன்களையும் அடித்தனர். காலின் டி கிராண்ட் ஹோம் 43 ரன்களும் அறிமுக வீரர், அதுவும் ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன் 44 ரன்களும் டிரெண்ட் போல்ட் 38 ரன்களும் அடித்து அசத்தினர். 225 ரன்களுக்கே நியூசிலாந்து அணியின் 7 விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்திவிட்ட நிலையில், எட்டாவது விக்கெட்டுக்கு டி கிராண்ட் ஹோமுடன் இணைந்து அடித்து ஆடி ஸ்கோர் செய்தார் கைல் ஜாமிசன். ஒரு பவுலரான அவரது அதிரடியை கூட கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் நிராயுதபாணியாக நின்றனர். அதேபோல கடைசி வீரராக களத்திற்கு வந்த டிரெண்ட் போல்ட், 24 பந்தில் 38 ரன்களை குவித்து, நியூசிலாந்து அணி 348 ரன்களை எட்ட உதவினார். 

கைல் ஜாமிசன், டிரெண்ட் போல்ட் ஆகிய பவுலர்களைக்கூட வீழ்த்த முடியாமல் அவர்கள் இருவரும் சேர்ந்து 82 ரன்களை அடிக்க அனுமதித்தனர் இந்திய பவுலர்கள். நியூசிலாந்து பவுலர்கள், கோலி, புஜாரா போன்ற ஜாம்பவான்கள் மீதே ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்திய பவுலர்களால் நியூசிலாந்து பவுலர்களை கூட வீழ்த்த முடியவில்லை. 

இரண்டாவது இன்னிங்ஸிலுமே பிரித்வி ஷா மற்றும் கோலி ஆகியோரை பக்காவாக திட்டம்போட்டு, அவர்களை ஆடவைத்து, அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்தினர் நியூசிலாந்து பவுலர்கள். குறிப்பாக டிரெண்ட் போல்ட் அதை சிறப்பாக செய்தார். பிரித்வி ஷாவிற்கு, ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் செட் செய்து விட்டு லெக் திசையில் ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார். போல்ட் திட்டமிட்டதை போலவே அதை ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் பிரித்வி ஷா அடிக்க, அதை டாம் லேதம் கேட்ச் பிடித்தார். அதேபோல கோலிக்கும் ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்லோவாக வீசி விக்கெட்டை வீழ்த்தினார் டிரெண்ட் போல்ட். 

அதேபோல, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் என யாரையுமே களத்தில் நிலைக்க அனுமதிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸிலும் வெறும் 191 ரன்களுக்கு சுருட்டினர் நியூசிலாந்து பவுலர்கள். இரண்டாவது இன்னிங்ஸில் அனுபவ பவுலர்கள் டிம் சௌதியும் டிரெண்ட் போல்ட்டும் அசத்தினர். டிம் சௌதி 5 விக்கெட்டுகளையும் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி, களத்திற்கு வருவதற்கு முன்பே, எந்தெந்த இந்திய வீரரை எப்படி வீழ்த்த வேண்டும் என்று ஒரு விரிவான மற்றும் தெளிவான திட்டங்களுடன் வந்து அதை சரியாக செயல்படுத்தி இந்திய அணியிடமிருந்து வெற்றியை பறித்தது. 

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோலி, புஜாரா ஆகியோர் பேட்டிங்கில் சொதப்ப, நட்சத்திர பவுலர்களான பும்ரா, ஷமியின் பவுலிங்கும் எடுபடாமல் போக, இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. 

சமகால கிரிக்கெட்டில் தலைசிறந்த பவுலிங் யூனிட்டாக பாராட்டப்பெற்ற இந்திய பவுலர்களின் பவுலிங் நியூசிலாந்தில் எடுபடவில்லை. இந்நிலையில், நியூசிலாந்து பவுலர்களால் சாதிக்க முடிந்ததற்கும் இந்திய பவுலர்களால் அது முடியாததற்குமான காரணத்தை ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். 

Also Read - ரஞ்சி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்

இதுகுறித்து பேசியுள்ள ஸ்காட் ஸ்டைரிஸ், நியூசிலாந்து பவுலர்கள் மற்றும் இந்திய பவுலர்களின் ஸ்டைலே வேறு வேறு. நியூசிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதில் கவனம் செலுத்தினர். இரண்டாவது இன்னிங்ஸில், அவர்கள் ஸ்விங் செய்ததை பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்திய பவுலர்கள் சீம் மூமெண்ட்டை பயன்படுத்தினர். அது எடுபடவில்லை. ஏனெனில் சீமை பயன்படுத்தி வீசியதால், பந்து வந்த லைனிலேயே வில்லியம்சன் அபாரமாக ஷாட்டுகளை ஆடினார். அதனால் இந்திய அணியின் பவுலிங் வில்லியம்சனுக்கு எந்த விதத்திலும் சிக்கலாகவே இல்லை என்று ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.