கோலியை அதிகமுறை வீழ்த்திய பவுலர்; ஐபிஎல்லில் அபாரமான சாதனைகளுக்கு சொந்தக்கார பவுலர்! ஏலத்தில் விலைபோகாத கொடுமை
ஐபிஎல்லில் விராட் கோலியை அதிகமான முறை வீழ்த்திய பவுலரான சந்தீப் ஷர்மா, 16வது சீசனுக்கான ஏலத்தில் அவரது அடிப்படை விலைக்குக்கூட விலைபோகாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் கடந்த 23ம் தேதி கொச்சியில் நடந்தது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அதிக கிராக்கி இருந்தது. சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களுக்காக அணிகள் அடித்துக்கொண்டன.
சாம் கரன் ரூ.18.5 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார் சாம் கரன். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. பென் ஸ்டோக்ஸை ரூ.16.25கோடிக்கு சிஎஸ்கே அணியும், நிகோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹாரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஏலத்தில் எடுத்தன.
ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த வீரர் கண்டிப்பாக முச்சதம் அடிப்பார்..! சுனில் கவாஸ்கர் நம்பிக்கை
ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்களில் அதிர்ச்சிகரமான ஒரு வீரர் சந்தீப் ஷர்மா. மிதவேகப்பந்துவீச்சாளரான சந்தீப் ஷர்மா அருமையாக ஸ்விங் செய்து வீசக்கூடியவர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இவரும் புவனேஷ்வர் குமாரும் இணைந்து எதிரணிகளின் பேட்டிங் ஆர்டரை சரித்துள்ளனர். புவனேஷ்வர் குமார் - சந்தீப் ஷர்மா இணைந்து ஆடியபோது சன்ரைசர்ஸ் அணி வலுவான பவுலிங் அணியாக திகழ்ந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் சந்தீப் ஷர்மா ஆடியிருக்கிறார்.
ஐபிஎல்லில் 104 போட்டிகளில் ஆடி 114 விக்கெட்டுகளை வீழ்த்திய சந்தீப் ஷர்மா, ஐபிஎல்லின் சிறந்த பவுலர்களில் ஒருவர். ஆனாலும் அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு கூட எந்த அணியும் அவரை எடுக்க முன்வரவில்லை. இது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.
ஐபிஎல்லில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பவுலர் சந்தீப் ஷர்மா. புவனேஷ்வர் குமார் மட்டுமே சந்தீப் ஷர்மாவிற்கு முன்னிருக்கிறார். அந்தளவிற்கு பவர்ப்ளேயில் அருமையாக ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தவல்ல பவுலர். 2014லிருந்து 2020 வரை ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பவுலர் சந்தீப் ஷர்மா ஆவார். மேலும் ஐபிஎல்லில் விராட் கோலியை அதிக முறை வீழ்த்திய பவுலரும் சந்தீப் ஷர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பேர்ப்பட்ட பவுலரை ரூ.50 லட்சத்துக்குக்கூட எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம் தான். இந்திய பவுலரான அவர், அணியின் பேலன்ஸை வலுப்படுத்த கண்டிப்பாக உதவிகரமாக இருந்திருப்பார்.