IPL 2023: அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங்கை அடி பிரித்து மேய்ந்த சாம் கரன், பாட்டியா..! MIக்கு கடின இலக்கு
ஐபிஎல் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 214 ரன்களை குவித்து, 215 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று மும்பை வான்கடேவில் நடந்துவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜுன் டெண்டுல்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
அதர்வா டைட், பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டன், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சாம் கரன்(கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான் ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக இறங்கிய மேத்யூ ஷார் 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 17 பந்தில் 26 ரன்களும், அதர்வா டைட் 17 பந்தில் 29 ரன்களும் அடித்தனர். லிவிங்ஸ்டன் 12 பந்தில் 10 ரன் மட்டுமே அடித்து மீண்டுமொருமுறை ஏமாற்றினார். அதன்பின்னர் ஹர்ப்ரீத் சிங் பாட்டியா மற்றும் கேப்டன் சாம் கரன் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக பேட்டிங் ஆடிய பாட்டியா, 28 பந்தில் 41 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் சாம் கரன், 29 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 55 ரன்களை விளாசினார். அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 16வது ஓவரில் சாம் கரன் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடிக்க, ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாச, அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் அடித்தது பஞ்சாப் அணி.
ஜித்தேஷ் ஷர்மா 7 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 25 ரன்களை விளாசி முடித்து கொடுக்க, 20 ஓவரில் 214 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 215 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது.