IPL 2023: நீயெல்லாம் (வார்னர்) இனிமேல் ஐபிஎல்லில் ஆட வராத..! சேவாக்கின் விமர்சனத்துக்கு வார்னரின் பதில்
அதிரடியாக பேட்டிங் ஆடமுடியவில்லை என்றால் ஐபிஎல்லுக்கு வராதே என்று டேவிட் வார்னரை வீரேந்திர சேவாக் மிகக்கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்லார் வார்னர்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய டெல்லி கேபிடள்ஸ் அணி, கேகேஆருக்கு எதிரான 6வது போட்டியில் முதல் வெற்றியை பெற்றது.
இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணி தொடர் தோல்விகளை தழுவுவதற்கு முக்கியமான காரணம், படுமோசமான பேட்டிங் தான். தொடக்க வீரர் பிரித்வி ஷா 6 இன்னிங்ஸில் 2 டக் அவுட்டுகளுடன் மொத்தமாகவே 47 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் 285 ரன்களை குவித்து 2ம் இடத்தில் இருக்கிறார்.
ஆனாலும் அவருக்கு மறுமுனையில் மற்ற வீரர்களிடமிருந்து ஆதரவு கிடைக்காததால் அவரால் அவரது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆட முடியவில்லை. ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 6166 ரன்களுடன் 3ம் இடத்தில் இருக்கும் வார்னர், ஐபிஎல்லில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் ஒருவர்.
ஆனால் அவர் இந்த சீசனில் அவரது இயல்பான அதிரடியான பேட்டிங்கை ஆடமுடியாமல் தவித்துவருகிறார். ஐபிஎல்லில் அவரது ஸ்டிரைக் ரேட் 140. ஆனால் இந்த சீசனில் அவரது ஸ்டிரைக் ரேட் வெறும் 120 மட்டுமே.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் வார்னர் மந்தமாக ஆடி 55 பந்தில் 65 ரன்கள் அடித்திருந்தார். மறுமுனையில் மற்ற பேட்ஸ்மேன்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அவர் பொறுப்புடன் ஆடி இன்னிங்ஸை இழுத்துச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அப்படி ஆடியிருந்தார். ஆனால் அவரது மந்தமான பேட்டிங்கால் அதிருப்தியடைந்த வீரேந்திர சேவாக் அவரை கடுமையாக விமர்சித்திருந்தார்.
வார்னர் குறித்து பேசிய சேவாக், டேவிட் வார்னர்... நீ கவனிக்கிறாய் என்றால், கேட்டுக்கொள்... தயவுசெய்து நன்றாக விளையாடு. 25 பந்தில் 50 ரன்கள் அடி.. யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்த்து எப்படி 25 பந்தில் 50 அடிக்க வேண்டும் என்று கற்றுக்கொள். உன்னால் அப்படி அடித்து ஆடமுடியவில்லை என்றால் இங்கு வந்து ஐபிஎல்லில் ஆடாதே என்று மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார் சேவாக்.
இந்நிலையில், கேகேஆருக்கு எதிராக முதல் வெற்றியை டெல்லி கேபிடள்ஸ் அணி பெற்ற பின் சேவாக்கின் விமர்சனத்திற்கு பதிலளித்த டேவிட் வார்னர், நான் எனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடவில்லை என்று என் மீது விமர்சனம் உள்ளது. ஆனால் மறுமுனையில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகள் விழுந்துவிட்டன. 2 ஓவரில் நான் வெறும் 3 பந்து மட்டுமே பேட்டிங் ஆடியிருக்கிறேன் என்றால், என்னால் என்ன செய்யமுடியும். அந்த சமயத்தில் பொறுப்புடன் ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. பெங்களூருவில் நான் விரைவில் ஆட்டமிழந்ததால் என் மீது விமர்சனம் எழுந்திருக்கும். அதற்கு நான் என்ன செய்யமுடியும்..? இது விளையாட்டு என்றார் வார்னர்.