5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நான்காவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடிவரும் நிலையில், அண்மையில் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியோ படுமோசமாக ஆடிவருகிறது. 

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.  இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 497 ரன்களை குவிக்க, இங்கிலாந்து அணி 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 196 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸை 186 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

இரண்டாவது இன்னிங்ஸிலும் வார்னர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மார்கஸ் ஹாரிஸ் மற்றும் லபுஷேனும் சோபிக்கவில்லை. ஆனால் வழக்கம்போலவே ஸ்மித் அபாரமாக ஆடினார். இந்த போட்டியில் வெல்ல வேண்டுமானால் விரைவில் ரன்களை குவித்துவிட்டு இங்கிலாந்து அணியை முடிந்தளவிற்கு விரைவில் பேட்டிங் ஆட விட வேண்டும் என்பதை உணர்ந்து நான்காம் நாள் ஆட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார் ஸ்மித். 

முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். 82 ரன்களை குவித்து ஸ்மித் ஆட்டமிழந்தார். நான்காம் நாள் ஆட்டத்தில் விரைவில் முடிந்தவரை ரன் குவித்துவிட்டு இங்கிலாந்தை ஆடவிட்டால்தான் வெற்றி பெற முடியும் என்பதால், ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து ஆடி ரன் சேர்த்தனர். 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்ய, 383 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 197 ரன்களுக்கே இரண்டாவது இன்னிங்ஸில் ஆல் அவுட்டாகி 185 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

கம்மின்ஸின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அவரிடம் 4 விக்கெட்டுகளை இழந்தது. 383 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பர்ன்ஸை முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே பாட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ரூட்டை முதல் பந்திலேயே வீழ்த்தினார் கம்மின்ஸ். கடைசி நாள் ஆட்டத்திலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்தபிறகு, இந்த போட்டி குறித்து டுவீட் செய்திருந்த சச்சின் டெண்டுல்கர், இனிமேல் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்பின்னர் நாதன் லயன் தான் முடிவை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான வீரராக இருக்கப்போகிறார் என்று தனது உள்ளுணர்வு சொல்வதாக தெரிவித்திருந்தார். அவருதான் முடிவை தீர்மானிக்கும் வீரர்னு என் உள்ளுணர்வு சொல்லுது - சச்சின் டெண்டுல்கர்

ஆனால் முதல் இன்னிங்ஸில் விக்கெட்டே வீழ்த்தாத லயன், முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தியது போல இரண்டாவது இன்னிங்ஸிலாவது அசத்துவார் என்றால், அதுவும் இல்லை. இரண்டாவது இன்னிங்ஸில் கம்மின்ஸ் தான் மிரட்டினார். லயன் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். சச்சின் டெண்டுல்கரின் உள்ளுணர்வு உண்மையாகாமலே போய்விட்டது.