ஆஷஸ் தொடரின் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நான்காவது போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. 3 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. லார்ட்ஸில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. 

இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஸ்மித்தின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 497 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை நடந்த மூன்று நாள் ஆட்டத்தில் பெரும்பாலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் தான் மூன்று நாட்கள் முடிந்தும் கூட, முதல் இன்னிங்ஸே இன்னும் முடியவில்லை. இந்த போட்டியில் திடீரென ஏதேனும் அதிசயங்கள் நிகழ்ந்தாலோ அல்லது இங்கிலாந்து அணி படுமோசமாக சொதப்பினாலோதான் வெற்றி - தோல்வி தீர்மானமாகும். இல்லையெனில் போட்டி டிரா தான் ஆகும். 

இந்நிலையில், இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாய்ப்பிருப்பதாக சச்சின் டெண்டுல்கர் கருதுகிறார் என்பதை அவரது டுவீட்டின் வாயிலாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு, இனிமேல் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்பின்னர் நாதன் லயன் தான் முடிவை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான வீரராக இருக்கப்போகிறார் என்று தனது உள்ளுணர்வு சொல்வதாக சச்சின் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

ஆனால் சச்சின் இந்த டுவீட்டை பதிவிட்ட பின்னர் நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை முதல் இன்னிங்ஸில் இழந்தது. அதில் ஒன்று கூட லயன் வீழ்த்தவில்லை. ஆனால் 26 ஓவர்கள் வீசியுள்ளார். ஆனாலும் இன்னும் ஒரு இன்னிங்ஸ் எஞ்சியுள்ளதால் சச்சினின் உள்ளுணர்வு பலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

இதுபோன்ற போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் நாதன் லயன் தனது அபாரமான பவுலிங்கின் மூலம் எதிரணியை வீழ்த்தி வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் கூட அதுதான் நடந்தது. அதேபோன்று இந்த போட்டியிலும் நடக்கிறதா என்று பார்ப்போம்.