சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள்.. வரலாற்று சாதனை படைத்த ரோஹித் சர்மா
சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் விளாசிய 2வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சிக்ஸர்களுக்கென்றே பெயர்போன வெகுசில வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். நவ்ஜோத் சிங் சித்து, ஷாஹித் அஃப்ரிடி, கிறிஸ் கெய்ல், ஜெயசூரியா, பிரண்டன் மெக்கல்லம் வரிசையில் ரோஹித் சர்மாவும் அசால்ட்டாக சிக்ஸர்களை அடித்து குவிக்கும் வீரர்.
சர்வதேச கிரிக்கெட்டில் 497 சிக்ஸர்களை விளாசியிருந்த ரோஹித் சர்மா, வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர்களுடன் 28 பந்தில் 51 ரன்கள் அடித்து, 500 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைத்தார்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 271 ரன்கள் அடித்தது. 272 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா காயம் காரணமாக ஓபனிங்கில் பேட்டிங் ஆட வரவில்லை. 207 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பின்னர் வேறுவழியின்றி காயத்துடன் களமிறங்கிய ரோஹித் சர்மா அதிரடியாக பேட்டிங் ஆடி 28 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்களை குவித்து கடைசி வரை போராடியும் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் அடித்த 5 சிக்ஸர்களுடன், ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டி, சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கிறிஸ் கெய்ல் 553 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 256 சிக்ஸர்கள், டி20 கிரிக்கெட்டில் 182 சிக்ஸர்கள் மற்றும் டெஸ்ட்டில் 64 சிக்ஸர்கள் என மொத்த 502 சிக்ஸர்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, விரைவில் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துவிடுவார்.