விபத்து நடந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.. ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தது மறுபிழைப்பு..! போலீஸார் தகவல்
ரிஷப் பண்ட் கார் விபத்து நடந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்ததாகவும், ரிஷப் பண்ட் உயிர் பிழைத்ததே மறுபிழைப்பு என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், வங்கதேசத்துக்கு எதிராக அண்மையில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் ஆடிய ரிஷப் பண்ட், அடுத்ததாக நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் டெல்லியிலிருந்து ரூர்கேலாவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஹரித்வார் மாவட்டம் நார்சன் பகுதியில் அவரது கார் விபத்துக்குள்ளானது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ ரக சொகுசு காரை ரிஷப் பண்ட் தான் ஓட்டியுள்ளார். 90 கிமீ வேகத்தில் சென்ற ரிஷப் பண்ட்டின் கார் சாலைத்தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
நான் தூங்கியதால் விபத்து ஏற்பட்டது: நொடிப் பொழுதில் உயிர் பிழைத்த ரிஷப் பண்ட் ஓபன் டாக்!
இந்த கோர விபத்தில் கார் பலமுறை சுழன்று விழுந்து தீப்பிடித்து எரிந்தது. கார் கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்ட் வெளியேற முயற்சித்த, கடும் சத்தத்தை கேட்டு அங்கு குவிந்த மக்களும், அப்பகுதி போலீஸாரும் இணைந்து ரிஷப் பண்ட்டை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த கோர விபத்தில் ரிஷப் பண்ட் உயிர்பிழைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று ஹரித்வார் போலீஸார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த ஹரித்வார் போலீஸ், அந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்ததாகவும், இந்த விபத்தில் ரிஷப் பண்ட் உயிர்பிழைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்தனர்.