கமெண்ட்ரியின்போது ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மார்னஸ் லபுஷேன் (204) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (200) ஆகிய இருவரின் இடத்தை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 598 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 315 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் அடித்துள்ளது.
இந்த போட்டியை சேனல் 7 ஒளிபரப்பும் நிலையில், அந்த சேனலின் சார்பில் வர்ணனை செய்யும் வர்ணனையாளர்களில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் ஒருவர். இந்த போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல்நிலையில் என்ன பிரச்னை, இப்போது எப்படி இருக்கிறார் ஆகிய தகவல்கள் வெளிவரவில்லை.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், அந்த அணிக்கு 2003 மற்றும் 2007 ஆகிய 2 ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக 2 ஒருநாள் உலக கோப்பைகளை வென்று கொடுத்தவர். சுமார் 10 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் அசைக்க முடியாத வலுவான அணியாக ஆஸ்திரேலிய அணியை வைத்திருந்தார். அவரது கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணி ஆடிய பெரும்பாலான தொடர்களை அந்த அணி தான் வென்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் 27,483 ரன்களை குவித்துள்ள ரிக்கி பாண்டிங், அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கரா ஆகிய இருவருக்கும் அடுத்த 3ம் இடத்தில் உள்ளார்.