இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவரில் 278 ரன்களை குவித்து 279 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஆடாததால் கேஷவ் மஹராஜ் கேப்டன்சி செய்தார். டாஸ் வென்ற கேஷவ் மஹராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் தலா 2 மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.

இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடாதீங்க.. இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்

இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆவேஷ் கான்.

தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ஷம்ஸி ஆகிய இருவருக்கு பதிலாக ரீஸா ஹென்ரிக்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஆகிய இருவரும் ஆடுகின்றனர்.

தென்னாப்பிரிக்க அணி:

ஜே மலான், குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேஷவ் மஹராஜ் (கேப்டன்), ஃபார்ச்சூன், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜே மலான் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவரில் 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி.

அதன்பின்னர் ரீஸா ஹென்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி, இருவருமே அரைசதம் அடித்து, 3வது விக்கெட்டுக்கு 129 ரன்களை குவித்தனர். மிடில் ஓவர்களில் இந்திய ஸ்பின்னர்கள் மற்றும் ஃபாஸ்ட் பவுலர்களின் பவுலிங்கை அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்ததால் தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. 

ரீஸா ஹென்ரிக்ஸ் - மார்க்ரம் இணைந்து 21 ஓவரில் 129 ரன்களை குவித்தனர். மார்க்ரம் 89 பந்துகளில் 79 ரன்களும், ரீஸா ஹென்ரிக்ஸ் 76 பந்துகளில் 74 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இருவருக்குமே சதமடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் கூட, இருவரும் சதத்தை தவறவிட்டனர். 

இதையும் படிங்க - 2023 ஒருநாள் உலக கோப்பைக்கு அணி தேர்வு செய்வது ரொம்ப கஷ்டம்.! பாவம் தேர்வாளர்கள் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

கிளாசன் 26 பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 40 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 221 ரன்கள் அடித்திருந்தது. எனவே 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் வாய்ப்பு அந்த அணிக்கு இருந்தது. அடித்து ஆடக்கூடிய டேவிட் மில்லர் டெத் ஓவர்களில் களத்தில் இருந்தும் கூட, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களான முகமது சிராஜ், ஆவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் டெத் ஓவர்களை அபாரமாக வீசி, ஸ்கோர் செய்யவிடாமல் கட்டுப்படுத்தியதன் விளைவாக, தென்னாப்பிரிக்க அணி 50 ஓவரில் 278 ரன்கள் அடித்தது. 

279 ரன்கள் என்ற இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது தென்னாப்பிரிக்கா. தென்னாப்பிரிக்கா ஆடிய விதத்திற்கு இந்த ஸ்கோர் குறைவுதான் என்றாலும்கூட, 279 ரன்கள் என்பது ராஞ்சி கண்டிஷனில் சவாலான இலக்கே.