பாகிஸ்தான் சூப்பர் லீக் எலிமினேட்டர் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெஷாவர் ஸால்மி அணி 2வது தகுதிப்போட்டியில் இன்று லாகூர் காலண்டர்ஸை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் லாகூர் காலண்டர்ஸை வீழ்த்தி நேரடியாக ஃபைனலுக்கு தகுதிபெற்றது முல்தான் சுல்தான்ஸ் அணி. எலிமினேட்டரில் பெஷாவர் ஸால்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதின.
லாகூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:
அலெக்ஸ் ஹேல்ஸ், ரஹ்மானுல்லா குர்பாஸ், சொஹைப் மக்சூத், காலின் முன்ரோ, ஷதாப் கான் (கேப்டன்), அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஃபஹீம் அஷ்ரஃப், முபாசிர் கான், ஹசன் அலி, முகமது வாசிம், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
பெஷாவர் ஸால்மி அணி:
பாபர் அசாம் (கேப்டன்), சயிம் அயுப், முகமது ஹாரிஸ், ஹசீபுல்லா கான் (விக்கெட் கீப்பர்), டாம் கோலர் காட்மோர், ஜேம்ஸ் நீஷம், ஆமீர் ஜமால், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், முஜீபுர் ரஹ்மான், வஹாப் ரியாஸ், சல்மான் இர்ஷத்.
முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான பாபர் அசாம் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 39 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் அடித்தார் பாபர் அசாம். அதன்பின்னர் மிடில் ஆர்டரில் முகமது ஹாரிஸ் 17 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் பெஷாவர் ஸால்மி அணி 183 ரன்களை குவித்தது.
184 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் 3ம் வரிசையில் ஆடிய சொஹைப் மக்சூத் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 57 ரன்களுக்கும், மக்சூத் 60 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்ற வீரர்கள் மளமளவென சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். பின்வரிசையில் கேப்டன் ஷதாப் கான் 12 பந்தில் 26 ரன்கள் அடித்து போராடியும் கூட, 20 ஓவரில் இஸ்லாமாபாத் அணி 171 ரன்கள் அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது.
பீஸ்ட் மோடில் உள்ள விராட் கோலி எத்தனை சதங்கள் அடிப்பார்..? ஷோயப் அக்தரின் முரட்டு கணிப்பு
இந்த போட்டியில் வெற்றி பெற்ற பெஷாவர் ஸால்மி அணி 2வது தகுதிப்போட்டியில் இன்று லாகூர் காலண்டர்ஸை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் ஜெயிக்கும் அணி வரும் 18ம் தேதி நடக்கும் ஃபைனலில் முல்தான் சுல்தான்ஸை எதிர்கொள்ளும்.
