பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இஸ்லாமாபாத் யுனைடெட் - குவாட்டா கிளாடியேட்டர்ஸ் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:
காலின் முன்ரோ, ரஹ்மானுல்லா குர்பாஸ், வாண்டர்டசன், ஷதாப் கான் (கேப்டன்), அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், முபாசிர் கான், ஹசன் அலி, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, அப்ரார் அகமது.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி:
ஜேசன் ராய், மார்டின் கப்டில், வில் ஸ்மீத், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அகமது (கேப்டன், விக்கெட் கீப்பர்), இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், ஒடீன் ஸ்மித், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஐமல் கான்.
முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரரான காலின் முன்ரோ 22 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்களை விளாசினார். கேப்டன் ஷதாப் கான் 14 பந்தில் 12 ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின்னர் இறங்கிய அசாம் கான் காட்டடி அடித்து அரைசதம் அடித்தார். சிக்ஸர் மழை பொழிந்து சதத்தை நெருங்கிய அசாம் கான் 42 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 97 ரன்களை குவித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ஆசிஃப் அலி 24 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 42 ரன்களையும், ஃபஹீம் அஷ்ரஃப் 6 பந்தில் 17 ரன்களையும் விளாச, 20 ஓவரில் 220 ரன்களை குவித்தது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி.
டான் பிராட்மேனை விட அதிக சராசரி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஹாரி ப்ரூக்
221 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் அதிகபட்சமாக முகமது ஹஃபீஸ் 26 பந்தில் 48 ரன்கள் அடித்தார். கேப்டன் சர்ஃபராஸ் அகமது 36 பந்தில் 41 ரன்களும், இஃப்டிகார் அகமது 27 பந்தில் 39 ரன்களும் அடிக்க, மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, குவெட்டா அணி 19.1 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 63 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி அபார வெற்றி பெற்றது.
