டான் பிராட்மேனை விட அதிக சராசரி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஹாரி ப்ரூக்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 6 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள ஹாரி ப்ரூக், வெறும் 9 இன்னிங்ஸ்களில் 100க்கும் அதிகமான சராசரியை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக். கடந்த ஆண்டு செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹாரி ப்ரூக்கிற்கு, நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் அவரது 6வது டெஸ்ட் போட்டியாகும்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து இங்கிலாந்தின் அபார வெற்றிக்கு உதவிய ஹாரி ப்ரூக், வெலிங்டனில் நடந்துவரும் 2வது டெஸ்ட்டில் 169 பந்தில் 184 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார்.
21 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணிக்கு 4வது விக்கெட்டுக்கு ஹாரி ப்ரூக் - ஜோ ரூட் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இருவருமே சதமடித்து அணியை காப்பாற்றி மெகா ஸ்கோரை நோக்கி அழைத்து செல்கின்றனர். முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 315 ரன்களை குவித்துள்ளது. ப்ரூக் 184 ரன்களுடனும், ரூட் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த போட்டியில் அடித்த அபார சதத்தின் மூலம் வெறும் 9 இன்னிங்ஸ்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 என்ற சராசரியை எட்டி சாதனை படைத்துள்ளார் ஹாரி ப்ரூக். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் சராசரி, கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் டான் பிராட்மேனின் 99.94 என்பதுதான். அதை முந்தி 100.87* என்ற சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார் ஹாரி ப்ரூக்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 9 இன்னிங்ஸ்களில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற வினோத் காம்ப்ளியின் (798 ரன்கள்) சாதனையை முறியடித்துள்ளார் ஹாரி ப்ரூக்.