கோப்பையை மட்டுமல்ல மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள் - இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து
உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 2ந் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி குரூப் ஸ்டேஜில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 8 சுற்றில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்தை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எதிர்கொண்டது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்கத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
இதையும் படியுங்கள்... 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டிராபியை வென்ற இந்தியா- தோனியின் சாதனை பட்டியலில் இடம் பிடித்த ரோகித்!
அதன்பின்னர் டி காக் உடன் ஜோடி சேர்ந்த கிளாசன் இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். ஒரு கட்டத்தில் 30 பந்துக்கு 30 ரன்கள் எடுத்தால் போதும் என்கிற நிலை வந்தது. அந்த நேரத்தில் கிளாசன் அவுட் ஆக மேட்ச் படிப்படியாக இந்தியா பக்கம் திரும்பியது. பும்ரா, அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களின் மிரட்டலான பந்துவீச்சால் தென் ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு வெற்றியை தட்டிச் சென்றனர்.
2வது முறையாக உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஒட்டுமொத்த இந்திய மக்கள் சார்பில் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் எங்களை பெருமைப்படுத்தி உள்ளீர்கள். உங்களது சிறப்பான ஆட்டம் அனைவரது மனதையும் வென்றுள்ளது. நீங்கள் உலகக் கோப்பையை வென்றது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள். இந்த போட்டி தனி சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், பல அணிகளுக்கு எதிராக, ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்தியா வென்றுள்ளது. இதுவே மிகப்பெரிய சாதனை. இந்த தோற்கடிக்க முடியாத இந்திய அணியின் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்த ரோகித் சர்மா – டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!