மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனுக்கான மினி ஏலம் மும்பையில் இன்று நடந்தது. இதில், ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் 5 வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நடக்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனுக்கான ஏலம் மும்பையில் இன்று நடந்தது. இந்த ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, குஜராத் கெயிண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், யுபி வாரியர்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வெளியிட்ட வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 165 வீராங்கனைகள் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்திற்கு பதிவு செய்திருந்தனர். இதில் 9 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமே 30 வீராங்கனைகள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் 3 ஸ்லாட், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் 10 ஸ்லாட், மும்பை இந்தியன்ஸ் அணியில் 5, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 7 ஸ்லாட் மற்றும் யுபி வாரியர்ஸ் அணியில் 5 ஸ்லாட் என்று மொத்தமாக 30 வீராங்கனைகள் இன்று நடந்த டபிள்யூபிஎல் 2024ல் ஏலம் எடுக்கப்பட்டனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மட்டுமே எந்த வீராங்கனைகளும் ரூ.1 கோடியும், அதற்கு மேலும் எடுக்கப்படவில்லை.
குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகளில் மட்டும் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்பட்டனர். அவர்கள் யார் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர் என்பது குறித்து பார்க்கலாம்.
இன்று நடந்த ஏலத்தில் முதல் வீராங்கனையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான ஃபோல் லிட்ச்ஃபீல்டு ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரது அடிப்படை விலை ரூ.30 லட்சம் மட்டுமே ஆகும். மும்பை இந்தியன்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஷப்னம் இஸ்மாயில் ரூ.1.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரது அடிப்படை தொகை ரூ.40 லட்சம் ஆகும்.
கர்நாடகாவைச் சேர்ந்த விருந்தா தினேஷ் தனது அடிப்படை விலையை ரூ.10 லட்சமாக நிர்ணயித்திருந்த நிலையில் யுபி வாரியர்ஸ் அணியில் ரூ.1.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதுவரையில் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விருந்தா தினேஷ் இடம் பெற்று விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வேதா கிருஷ்ணமூர்த்தி: குஜராத் ஜெயிண்ட்ஸ் வீராங்கனைகளின் முழு லிஸ்ட்!
இதே போன்று, இந்தியாவைச் சேர்ந்த கேஷ்வி கௌதம் தனது அடிப்படை விலையை ரூ.10 லட்சமாக நிர்ணயித்திருந்த நிலையில், அதிகபட்சமாக ரூ.2 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அன்னபெல் சதர்லேண்ட் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை தொகை ரூ.40 லட்சம் மட்டும் ஆகும்.
